Bread of Life Church India

பக்தர்களா? சீஷர்களா?

பெருந்திரளான பக்தர் கூட்டத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்று இயேசுவானவர் அன்றும், இன்றும், என்றுமே செயல்படவில்லை. மனிதனின் அறியாமை யால் இக்கால சூழ்நிலையில் தெய்வங்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் கூட ``பக்த கோடிகள்'' பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.
    ஆனால் இயேசுவானவர் பக்தர்கள் கூட்டத்தையல்ல! தம்மை உத்தமமாய் பின்பற்றும் ``சீஷர்கள்'' கூட்டத்தை எதிர்பார்க்கிறார். பக்தராவதற்கு கொள்கைகள் அவசியமல்ல, ஒருவருக்கு பக்தராக மாறுவது வெளிவேஷமாகவே இருக்கும். ஆனால் சீஷர்களாவது மனித உள்ளுணர்வுக்குள் நடக்கும் ஒரு மாபெரும் மறுரூபம், இவ்விதமான மறுரூபத்தையே இயேசு வானவர் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கொடுக்கும் படியாக தம்மை பின்பற்றும் படியான அழைப்பைக் கொடுக்கிறார்.

சீஷனுக்கும் பக்தனுக்கும் என்ன வித்தியாசம்!

    இயேசுவின் உண்மை சீஷனாக வாழ்வது மிகவும் கடினம் என்பது போல இக்கால கிறிஸ்தவம் ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறது. சுவிசேஷத்தை அறிந்த வர்கள் என்று சொல்லிக் கொண்டு, இன்னும் பாவத்தில் வாழ்ந்து கொண்டிருந்தால் உண்மையாக சுவிசேஷத்துக்கு நம்மை அர்ப்பணிக்காமல் வாழ்ந்து கொண்டி ருக்கிறோம் என்பதுதான் உண்மை.
    பக்தன் பாவத்திற்கு விலகி ஜீவிக்க வேண்டும் என்கிற உண்மைக்கு அப்பாற்பட்டவனாக இருக்கிறான். சீஷன் பாவத்திற்கும், உலக வழக்கத்திற்கும் விலகி ஜீவிக்க வேண்டும் என்பதற்கு உட்பட்டவன்.
    இயேசு கிறிஸ்துவுக்கு முன்பும் ``பக்தி மார்க்கம்'' இருந்தது. பக்தர்கள் இருந்தார்கள். அதற்கு தலைவனும் இருந்தான், ஆசாரியனும் இருந்தான். அந்த ``பக்தி மார்க்கம்''தான் இயேசு கிறிஸ்துவை மரண தண்டனைக்கு ஒப்புகொடுத்து, தங்கள் மதப் பாரம்பரியத்தை உடைக்கும்படியாக, மக்களுக்குள் ``விழிப்புணர்வை'' ஏற்படுத்துகிறான் என்றும், தங்கள் மதக் கோட்பாட்டை இழிவுபடுத்துகிறான் என்றும், இயேசு கிறிஸ்துவின் மேல் அவர்கள் வைத்த குற்றச்சாட்டுகள். அவரை மரத்தில் தூக்கி ஆணி அடித்து கொலை செய்தார்கள். ஆனாலும் அவர் உயிரோடு எழுந்து, தனக்குப்பின் தம்முடைய சீஷர் கூட்டத்தை ஏற்படுத்தினார். ஆயிரமாயிரமாக சீஷர்களின் தொகை பெருகி கொண்டிருந்தது.
   
சீஷர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சியாக ஜீவித்துக் கொண்டிருந்தார்கள். மதத் தலைவர்களுக்கும், உலக தத்துவங்களுக்கும், உலக அரசாங்கத்துக்கும் சவால் விட்டு எந்தளவிற்கு ஒடுக்கப் பட்டார்களோ, அதற்கும் மேலாக எழும்ப ஆரம்பித்தார்கள்.
    இவ்விதமாக உருவெடுத்த திருச் சபைக்கு காலத்துக்கு காலம் எதிர்ப்புகளும், தடைகளும் வந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி, கடந்த இரண்டாயிரமாண்டாக எத்தனையோ சீஷர்கள் உருவானார்கள். கள்ளப் போதனைகளும், உலக அமைப்பும் சபைகளுக்குள் புகுந்த பொழுது விரட்டி அடிக்கப்பட்டது. காரணம், சத்தியத்தினால் நிறைந்த சத்தானவர்கள் சீஷர்களாய் சபைகளில் நிறைந்திருந்தனர்.
    எப்பொழுதெல்லாம் சபைகளில் தொய்வு ஏற்பட்டதோ, அப்பொழுதெல்லாம் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகளை திருச்சபை அளவில்லாமல் கண்டது. இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டு துவக்கத் திலிருந்து சபைகள், ஊழியங்கள், கிறிஸ்தவ மதமாக பெருகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இயேசுவானவர் எதிர்பார்க்கும் தரமுள்ள சீஷர்களின் தொகை குறைந்து காணப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது, இக்காலத்தில் அப்படியெல்லாம் வாழ முடியாது என்ற தோல்வியான எண்ணத்தை பிசாசானவன் தந்திரமாக புகுத்தி விட்டதினால் அதற்கு அடிமைப்பட்டு விட்டதன் விளைவுகள்.
    சுயத்தில் மையங்கொண்டு, தங்கள் சபை அமைப்பை உயர்வாக எண்ணி, தங்களில் யாதொரு குறையும் இல்லை என்பது போன்ற நிலைக்குள்ளாக சென்றுவிட்டதே, மிக முக்கியமான தொய்வுக்கு காரணமாக அமைந்து விட்டது.
    வெளிப்படுத்தின விசேஷத்தில் லவோதிக் கேயா சபைக்கு சொல்லப்பட்ட தூதில் ``நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத் தக்கவனும், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்; <வெளி 3:17> என்று வேதம் கூறுகிறது. திருத்தவே முடியாத பாவம் எதுவென்றால், தன்னிடம் பாவமே இல்லை என்று எண்ணுகிற பாவந்தான். சீர் செய்யவே முடியாத குறை எதுவென்றால் தன்னிடம் குறையே இல்லை என்று எண்ணுகிற குறைதான்.
    இக்காலத்திலும் சபைகளும், கிறிஸ்தவனும், சீஷனாக முடியாதபடிக்கு பக்தனாகவே இருப்பதற்கும் இதுவே காரணம். நான் எல்லாவற்றிலும் மிகவும் சரியாகத்தானே இருக்கிறேன் என்று வாழ்ந்து கொண்டிருந்த பரிசேயன், தேவாலயத்தில் சென்று ஜெபித்த ஜெபத்தை இயேசுவானவர் சுட்டிக் காட்டுவதை கவனித்துப் பார்க்க வேண்டும்.
   
``தேவனே! நான் பறிகாரர், அநியாயக் காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப் போலவும், இந்த ஆயக்காரனைப் போலவும், இராததனால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். வாரத்தில் இரண்டு தரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசம பாகம் செலுத்தி வருகிறேன் <லூக்18:11,12> என்று தேவனுக்கு முன்பாக அறிக்கையிட்டுக் கொண்டிருக்கிறான். தன் தவறு சுட்டிக் காட்டப்படவோ, தன் பாவத்திலிருந்து விடுதலை பெற்றுக் கொள்ளவோ தயாராக இல்லாதது போல நடந்து கொள்கிறான். தவறெல்லாம் என்னிடமல்ல மற்றவர்களிடமே, மாற வேண்டியது நானல்ல மற்றவனே என்று பக்தனாக தன் கடமையைத் தவறாமல் செய்து வருகிறான். இந்த மனிதனைப் போலவே இக்காலகட்டத்திலும், கிறிஸ்தவத்துக்குள் மாய்மாலங்கள் வந்துவிட்டன. எப்படியெனில்,
    தாய் சபையைச் சார்ந்தவனென்றும், பாரம்பரிய சபையை சார்ந்தவனென்றும், முன் மாதிரி சபையை சார்ந்தவனென்றும், உபதேச சபையை சார்ந்தவனென்றும், பூரண சுவிசேஷ சபையை சார்ந்தவனென்றும், மணவாட்டி சபையைச் சார்ந்தவனென்றும், இன்னும் அநேக பெயர்களோடு இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களெல்லாம் சற்று நிதானித்தும், சிந்தித்தும் பார்க்க வேண்டும்.
    ``எந்தளவிற்கு நான் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின் பற்றும் சீஷனாக இருக்க பிரயாசப் பட்டிருக்கிறேன். சீஷனாவது ஒரே நாளில் நடந்து விடக்கூடியதும், ஒரு வாசலில் நுழைந்து மறு வாசலில் வந்து விடுவதுமல்ல! அது ஒவ்வொரு நாளும் பின்பற்றக் கூடியது. எனவே, சில வேளைகளில் சறுக்கினாலும், மீண்டும் என்னால் முடியும் என்று இயேசு கிறிஸ்துவையே சார்ந்து கொண்டு, செல்லும் பொழுது மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். அப்பொழுது பக்தனாக அல்ல, சீஷனாக தேவன் விரும்பும்படியாக பின் செல்லலாம்.

களைகளைக் களைவோம்

    பக்தி, வைராக்கியத்தை ஏற்படுத்தும், எப்படியெனில் பவுல் அப்போஸ்தலன் வாழ்க்கையிலே, அவர் ``பக்தி வைராக்கி யத்தின்படி சபையைத் துன்பப்படுத்தியவர்'' <பிலி 3:6>. பக்தி எப்பொழுதுமே வைராக்கியத்தையே ஏற்படுத்தும். ஆனால் அவர் எப்பொழுது சீஷனாக மாறினாரோ, அதன் பின் உலகத்திலுள்ளவைகளை குப்பையாக, தூசியாக எண்ண ஆரம்பித்தார்.
    பக்தி எதிர்க்கிறவனை அழிக்க நினைக்கும். உலக பொருள்களையே சார்ந்து நிற்கும், மேலும் தன்னலத்தை ஏற்படுத்தும். சீஷத்துவம் எதிர்க்கிறவர்களையும் அரவணைக்கும். உலகப் பொருட்களை துச்சமாக எறிந்து, பரம காரியங்களை உயர்வாக்கும் மேலும் தன்னலத்தையல்ல பிறருக்கானவைகளை தேட வைக்கும்.
    இவைகள் கட்டாயத்தினாலல்ல! அன்பினால் வருகிறது. இயேசுவானவர் சென்ற அடிச்சுவடுகளை பின்பற்றும்பொழுது, கற்றுக் கொடுக்கப்படும் பாடம் இதுவே! ஆனால் இக்காலத்தில் நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டிய நிலைக்குள்ளாக இருக்கிறோம். ஏனென்றால் ``கோதுமைக்குள் களைகள் விதைக்கப்பட்டுவிட்டது. பயிரோடு சேர்ந்து களைகளும் நிறைந்து காணப்படுகிறது     <மத் 13:25,26>
    பயிர்களுக்கும் களைகளுக்கும் வித்தியாசம் தெரிந்து கொள்ள முடியாதபடிக்கு இரண்டும் ஒன்றாகக் கலந்து விடப்பட்டுள்ளது. எப்படியெனில் சீஷர்களுக்குள்ளே பக்தர்களும் பெருகிவிட்டார்கள்.
    இன்றைக்கு சீஷர்களான ஈசாக்குகள் அல்ல! பக்தர்களான இஸ்மவேலர்களே நிறைந்து காணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பக்தர்கள் பின்பற்றும் படியாக வந்தவர்களல்ல! தன் தேவைகள் மட்டும் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்றே வந்தவர்கள். பக்தர் கூட்டமல்ல! சீஷர்கள் கூட்டமே! பரலோகத்தை நிரப்ப முடியும்.
    அநேகர் சீஷர்களாக வேண்டுமென்பதை அறிந்திருந்தும் அதற்குண்டான ``விலை கிரயத்தை'' செலுத்த தயாராக இல்லை. ஒரு பக்தன் இன்னொரு பக்தனை மட்டுமே, உருவாக்க முடியும். சீஷனே நல்ல சீஷனை உருவாக்க முடியும்.
    களைகள் வளருகின்றதே என்று மருந்து கொடுக்க முற்பட்டால் பயிரும் சேர்ந்து கருகுகின்றது. பயிர்கள் செழித்து வளரட்டும் என்றால் களைகளும் ஓங்கி வளர்ந்து பயிரை நெருக்குகிறது. விழித்துக் கொள்வதைத் தவிர தற்போது மாற்று மருந்து இல்லை. காரணம், ``இரண்டையும் அறுப்பு மட்டும் வளர விடுங்கள், அறுப்பு காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி; களைகளைப் பிடுங்கி அவைகளைச் சுட்டெரிக்கிறதற்கு கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்.''  <மத் 13:29,30> என்று இயேசுவானவர் கூறுகிறார்.
    கடைசி காலத்துக்குள்ளாக வந்து விட்டோம், இயேசுவானவரின் வருகை சமீபமாக வந்துவிட்டது. எனவே பக்தர்கள் எனும் களைகளைப் பார்த்து களைகளாக இருக்காமல், சீஷர்கள் என்னும் கோதுமைகளைப் பார்த்து கோதுமைகளாக இருப்பது நல்லது. திரளான இவ்வளவு பேர் செய்கிறது தவறா? என்று வேதத்துக்குப் புறம்பான வியாக்கியானத்தைத் தூக்கி எறிந்து விட்டு, வேதம் அழைக்கும் அழைப்புக்குள் வருவது நல்லது!!
    தேவன் ஒவ்வொருவரிடத்திலும் எதிர்பார்க்கும் தரம் மேலானது. அதற்காகத்தான் தேவன் நமக்கு இயேசு கிறிஸ்துவைக் கொடுத்திருக்கிறார். எனவே நாம் நன்றாக அறிந்து கொள்ள வேண்டியவைகள். ``சத்தியத்தை தள்ளுபடி செய்து, நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. அன்பைத் தொலைத்துவிட்டு, அமைதியை பெற்றுக் கொள்ள முடியாது. கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை விட்டு, கிறிஸ்தவனாக வாழ முடியாது.''     நாம் எப்படி வாழ்கிறோம் எதற்கு பிரயாசப்படுகிறோம். சிந்தித்துப் பார்ப்போம். களைகள் இருந்தால் களைந்து போடுவோம். தேவன் விரும்பும் தரத்திற்கு உயர்வோம். சீஷர்களாய் நமது பணியைத் தொடர்வோம்.

0 comments:

Post a Comment