வெற்றி வாழ்க்கை சாத்தியமே (தொடர் செய்தி, பகுதி 1)
``நாம் நம்மில் அன்பு கூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர் களாயிருக்கிறோமே'' (ரோமர் 8:37).
``நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்'' ( 1 கொரிந்தியர் 15:57).
``நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத் தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்'' (கொலோசெயர் 2:14,15).
``நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்'' ( 1 கொரிந்தியர் 15:57).
``நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத் தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்'' (கொலோசெயர் 2:14,15).
``கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்'' (2 கொரிந்தியர் 2: 14).
மேலே வாசித்த எல்லா வார்த்தைகளும் வேதாகமத்தில் நமக்காக கொடுக்கப்பட்டுள்ள அற்புதமான வாக்கியங்கள்.
இந்த வாக்கியங்களின் பொருள் என்னவென்றா, கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை அழைத்திருப்பது தோல்வியோடு வாழவேண்டும் என்பதற்காக அல்ல, அனுதினமும் வெற்றியோடு வாழவேண்டும் என்பதற்காகவே.
தோல்வி என்பது தேவ பிள்ளைகளுக்கு சொந்தமானது அல்ல, அது சாத்தானுக்கு சொந்தமானது. வெற்றி மட்டுமே தேவ பிள்ளைகளாக இருக்கிற நமக்கு சொந்தமானது.
இதுவரைக்கும் உங்களை தோல்வியின் எண்ணத்தில் வைத்திருந்து, தாழ்வு மனப்பான்மையோடும், பயத்தோடும் உங்களை மட்டுப்படுத்தி வைத்திருந்து இருக்கலாம். நீங்கள் வாழப்பிறந்தவர்கள் உலகை ஆளப்பிறந்தவர்கள் என்று நான் அல்ல நம்மை படைத்த தேவன் சொல்லுகிறார்.
இயேசு கிறிஸ்து எப்போது சிலுவையில் வெற்றி பெற்றாரோ, அப்பொழுதே அவரை பின்பற்றுகிற ஒவ்வொருவருக்கும் வெற்றி உறுதியானது.
எப்போது நாம் தோல்வியை ஒப்புக்கொண்டு, பாவத்தை அறிக்கை செய்தோமோ, அப்பொழுதே நம்மை அடிமைப்படுத்தியிருந்த சாத்தானின் எல்லா அடிமைத்தன நுகமும் உடைக்கப் பட்டுவிட்டது,
சில ஆண்டுகளுக்கு முன் அதிகமாக மாட்டு வண்டிகள்தான் பெரும்பாலும் கிராமப் புறங்களில் இருக்கும். அதில்தான் பொருள்களை ஏற்றிக்கொண்டு வருவது வழக்கம்.
சில நேரங்களில் வெகு தொலைவில் இருந்து பொருள்கள் ஏற்றிக்கொண்டு வரும்பொழுது இரவு நேரமாகி விடும். இரவெல்லாம் வண்டியை ஓட்டிக்கொண்டே வருவார்கள். அப்படி வரும் பொழுது வண்டியை ஓட்டிக்கொண்டு வருபவர் தூங்கி விடுவார். அது வழக்கமாக வரும் வழி என்பதால் மாடுகளும் சரியாக வந்து கொண்டே இருக்கும். ஏன் என்றால் அப்படி பழக்கு விக்கப்பட்டிருக்கும்.
ஒரு முறை ஒருவர் வெளி ஊருக்கு செல்லும் படியாக குடும்பமாக மாட்டு வண்டியில் புறப்பட்டார்கள். இரவு வந்தது. அசதியில் வண்டியை ஓட்டிச் சென்றவர் எப்போதும் போல் தூங்கி விட்டார். வண்டியில் இருப்பவர்களும் தூங்கி விட்டனர். வண்டியும் சென்று கொண்டு இருந்தது. திடீர் என்று வண்டியை ஓட்டி வந்தவர் தூக்கத்தில் இருந்து விழித்துப் பார்த்தார். அப்பொழுது அவர் போக வேண்டிய ஊருக்கு நேராக மாடுகள் வண்டியை இழுத்து செல்லாமல், வழக்கமாக பொருள்களை ஏற்றி வரும் ஊருக்கு செல்லும் வழியில் வெகு தூரம் சென்று விட்டது.
அப்பொழுதுதான் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தவர் தனது தவறை உணர்ந்து மறுபடியும் திருப்பி மாடுகளை ஓட்டி வந்தார்.
கடந்த வருடத்தில் கூட எனது வாழ்வில் நடந்த சம்பவத்தை இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். கடந்த சில வருடங்களாக ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தோம். அந்த வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்கு வந்து விட்டோம்.
அதன் பின்பு ஒருநாள் காலை எனது மகனை பள்ளியில் விட்டு விட்டு, வீட்டை நோக்கி வண்டியில் வந்த நான், எப்போதும் போல என்னை அறியாமல் பழைய வீட்டின் முன் போய் நின்றேன். அது வரை எனக்கு தெரியவில்லை. அங்கு போன பிறகுதான் எனக்கு தெரிந்தது. `இங்கு ஏன் வந்தோம் என்று'' நினைத்து வண்டியை திருப்புகையில் அந்த வீட்டில் இருந்த சகோதரன் ``என்ன பாஸ்டர் இந்த பக்கம், வீட்டிற்கு வந்து விட்டு போங்க'' என்று சொன்னதும் ``இல்ல பிரதர் சும்மா தான் வந்தேன் என்று சமாளித்து விட்டு வந்து விட்டேன்.
இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், நாமும் அப்படித்தான் உலக வழக்கத்திலும், அடிமைத்தனத்திலும், பாவத்திலும், இருந்த நாம் இயேசு கிறிஸ்து நம்மை பாவத்திலிருந்தும், உலக வழக்கத்திலிருந்தும், அடிமைத் தனத்திலிருந்தும் விடுவித்து பரிசுத்த பாதையில் நடத்தினாலும் சில நேரங்களில் அறியாமலும், பிசாசின் வஞ்சகத்திலும் மாட்டிக்கொண்டு, பழைய பழக்க வழக்கங்களுக்கு நேராக சென்று விடுவது உண்டு.
அப்படிப்பட்ட நேரத்தில் உடனே விழித்துக்கொண்டு, மறுபடியும் பழைய வழிகளை விட்டு உடனடியாக திரும்பி, இயேசு கிறிஸ்து நமக்கு வைத்திருக்கும் பரிசுத்த வழியில், வெற்றியின் வழியில் நடக்க வேண்டும். பிறகு அதுவே நம்முடைய பழக்க வழக்கமாக இருக்க வேண்டும்.
சிலர் இரட்சிப்பின் அனுபவத்திற்குள் வந்த பின்னும் வேதாகமத்தின் சத்தியங்களை சரியாக அறிந்து கொள்ளாமல் இருக்கிறபடியால் பிசாசானவன் அப்படிப்பட்டவர்களை பாவ வாழ்க்கை வாழும்படியாக செய்து, ``உன்னால் எல்லாம் பரிசுத்தமாக வாழமுடியாது. நீ எல்லாம் அப்படி இருக்க முடியாது'' என்று சொல்லி ஏமாற்றி வைத்திருக்கிறான்.
அன்பான தேவ பிள்ளைகளே, இயேசு கிறிஸ்து நம்மை பரிபூரணமாக எல்லா அடிமைத்தனத்தில் இருந்தும் விடுவித்து விட்டார்.
ஆகவே இனி நாம் அடிமையானவர்கள் அல்ல. தோல்வி நமக்கில்லை. இயேசு கிறிஸ்துவினால் வெற்றி வாழ்க்கை நமக்கு சாத்தியமே. அதைக்குறித்த சத்திய வசனங்களை தியானித்து விசுவாசத்தில் பெலன் அடைந்து, வெற்றி வாழ்க்கை வாழ்வோம்.
1. அறிந்து கொள்ள வேண்டிய
சத்தியங்கள்
அ ) சுயத்தின் அடிமைத் தனத்தில் இருந்து விடுதலை பெற்று விட்டோம்.
``ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல'' (ரோமர் 8:12).
மாம்சத்தின்படி என்று வேதாகமம் சொல்வது நம்முடைய சுய வாழ்வைக்குறித்து. அதாவது இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கிறதற்கு முன் நம்முடைய சுயமே நம்மை நடத்திக்கொண்டு வந்தது. நன்மையா தீமையா? என்றெல்லாம் பார்ப்பது இல்லை.
நம்முடைய மனம் எதை விரும்பியதோ, அதையே நாம் செய்து வந்தோம். ஆனால் கிறிஸ்துவுக்குள் வந்த பின் ``கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே'' (ரோமர் 8:2) என்று வேதாகமம் கூறுகிறது.
முன் காலத்திலே நாம் நமது சுயத்திற்கு அடிமைப்பட்டு இருந்தோம். அடிமைப்பட்டிருந்த அந்த நாட்களில் நம்முடைய மாம்சம் என்ன சொல்லியதோ, அதையே நாம் செய்து வந்தோம். அனால் இப்பொழுதோ,
நமது மாம்சத்திற்கு அதாவது சுயத்திற்கு நாம் கடனாளிகள் அல்ல.
மாம்சத்தின் கிரியைகளை குறித்து வேதம் நமக்கு காண்பித்து கொடுக்கிறது. அது எப்படிப்பட்டது என்றும் அதின் விளைவுகள் எப்படிப்பட்டது என்றும் வேத பகுதியில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
``மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே'' (கலாத்தியர் 5:19_21).
இவைகள் எல்லாம் நம்மை அடிமைப்படுத்தி இவைகளின் ஆளுகையில் நாம் வாழும்படியாக நம்மை நிர்பந்தப்படுத்தி வந்தது. ஆனால் நாம் எப்பொழுது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டோமோ, அப்பொழுதிலிருந்தே, இவைகள் எல்லாவற்றிலும் இருந்தும், இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் விடுவிக்கப்பட்டு விட்டோம். இது தான் நல்ல செய்தி,
`'நான் இன்னும் என் சுயத்திற்கு அடிமையாகவே இருக்கிறேன்'' என்று நாம் இன்னும் நினைத்துக் கொண்டிருப்போமானால் நம்மால் வெற்றி வாழ்க்கை வாழமுடியாது. நாம் விடுவிக்கப்பட்டு விட்டோம் என்று, நமது எண்ணத்தில் வேத வசனத்தைக் கொண்டுவர வேண்டும். நமது சிந்தையில் விடுதலையை முதலாவது பெற்றுக்கொள்ள வேண்டும்.
நமது சிந்தையில் ஏற்படுகிற மாற்றமே, நமது வாழ்க்கையில் வெளிப்படும்.
ஆதியில் ஆதாம் ஏவாள் தோல்வி யடைந்தது தேவன் அவர்களுக்கு கொடுத்திருந்த சுயாதீன வாழ்க்கையில்தான். எல்லாவற்றையும் அவர்களே நிதானித்து, அறிந்து தங்கள் சொந்த விருப்பத்தின்படி எதையும் தேர்வு செய்து மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதுதான் தேவனுடைய திட்டம்.
ஆனால் பிசாசு அவர்களுக்கு வேண்டாததை காண்பித்த பொழுது, அவர்களுக்குள் இருந்த சுயாதீனத்தை தவறாக பயன்படுத்தி, பிசாசின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்ததால் தங்கள் சுயாதீனத்தை விட்டு நீங்கி பிசாசின் அடிமைத்தனத்துக்குள்ளாக அவர்கள் போய் விட்டார்கள். ஆகையால் தேவனுடைய திட்டத்தின் படியாகவும், தேவ சித்தத்தின் படியாகவும் வாழ முடியாத படிக்கு, சுயம் அவர்களுக்குள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.
அப்பொழுது ஆரம்பித்த சுயம்தான் ஆதாம் ஏவாளின் சந்ததிகளாக இருக்கும் முழுமனுக்குலத்தையும் பிடித்துக் கொண்டது.
இதைக்குறித்து, ``மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்''
(1 யோவான் 2:16) என்று வேதம் கூறுகிறது.
இவைகள் எல்லாம் மனுக்குலத்தில் தொடரும் பொழுது மனிதனால் இவைகளில் இருந்து விடுபட முடியவில்லை. மனிதர்களாகிய நாம் இப்படிப்பட்ட அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கப்படும்படியாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் இப்படிப்பட்ட சோதனைகளுக்கு நேராக நடத்தப்பட்டார்.
எப்படி ஏதேனில் இருந்த ஆதாம் ஏவாளுக்கு பிசாசு சோதனைகளை கொடுத்தானோ, அதேபோல இயேசு கிறிஸ்துவையும் சோதிக்கும் படியாக பிசாசு செயல்பட்டான். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அந்த சோதனைகளை எல்லாம் ஜெயித்தார்.
முதலாம் ஆதாமை பிசாசினால் ஏமாற்ற முடிந்தது. ஆனால் பிந்தின (இரண்டாம்) ஆதாமாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அவனால் ஏமாற்ற முடியவில்லை.
பிரியமானவர்களே, இப்பொழுது நாம் ஆதாமின் வழியில் வந்தவர்களாக இருந்தாலும், எப்பொழுது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டோமோ, அதுமுதல் நாம் இரண்டாம் ஆதாமாகிய இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகளாக இருக்கிறோம்.
முற்காலத்திலே தோற்றுப் போனவனின் பிள்ளைகளாக இருந்த நாம் தோல்விகளையே சந்தித்து வந்தது உண்மைதான். ஆனால் இப்பொழுது நாம் தோற்றுப் போனவனாகிய ஆதாமின் சந்ததி அல்ல, இப்பொழுதோ, எல்லாவற்றையும் ஜெயித்தவராகிய இயேசு கிறிஸ்துவின் சந்ததி.
எனவே இனிநாம் மாம்சத்தின்படி வாழ்வதற்கு மாம்சத்திற்கு கடனாளிகள் அல்ல, மாம்சத்தின் கிரியைகளை ஜெயித்து வெற்றி வாழ்க்கை வாழவேண்டியவர்கள். இதை நாம் நம்முடைய பிறப்பால் அல்ல, இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, பின்பற்றுகிறபடியால் பெற்றுக்கொள்ளுகிறோம்.
இந்த செய்தியின் தொடர்ச்சி வரும் நாட்களில் தவறாமல்படியுங்கள்
0 comments:
Post a Comment