Bread of Life Church India

பூமி முழுவதும் அழியப் போகிறது



சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தனர். மகிழ்ச்சியுடன் கூடி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் திடீர் என்று ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். “ஏய் ஏன்டா அடிச்சுக்கிறீங்க, சண்டபோடாதீங்க, சண்டபோடாதீங்க’’ என்று ஒவ்வொருவரையும் விலக்கிக்கொண்டிருந்தான் சிறுவனான நோவா. “நல்லாதானே விளையாடிக்கொண்டிருந்தோம் நீ எதற்கு அவனை அடித்தாய்’’ என்று முதலாவது அடித்த சிறுவனிடம் கேட்டான் நோவா. “அவன் எப்போதும் என்னை கேலி பேசிக்கொண்டே இருக்கிறான். நான் சொல்ல சொல்ல கேட்காமல் தொடர்ந்து கேலி பேசிக்கொண்டே இருந்தான் அதனாலதான் அடிச்சேன்’’ என்றான் முதலாவது அடித்த சிறுவன்.
அடிவாங்கிய சிறுவன் அழுது கொண்டே, அடித்தவனை திரும்ப அடிக்கும்படியாக ஓடி வந்தான். அவனை பிடித்து தடுத்து நிறுத்திய நோவா. இருவரையும் பார்த்து, இப்படி சண்டையிடக்கூடாது.
கோபப்பட்டு மற்றவறை அடிப்பது ரொம்ப தப்பு, இப்படிப்பட்ட தவறை செய்யவே கூடாது. பார் அவன் எப்படி அழுகிறான். அவனிடத்தில் மன்னிப்புக்கேட்டு, அவனோடு பேசு, நமக்குள் பகை இருக்கவே கூடாது. அன்பாக இருக்க வேண்டும். அதைத்தான் கடவுளும் நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்று என்னுடைய அப்பா அடிக்கடி சொல்லுவார்’’ என்று சொல்லி சண்டை போட்ட இருவருடைய கையையும் பிடித்து ஒன்றாக சேர்த்து சமாதானம் செய்து வைத்தான்.
இதை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த நோவாவின் தகப்பன் லாமேக் தன்னுடைய மகனின் செயலைப்பார்த்து மனதிற்குள் மகிழ்ந்தவனாக “கடவுளே இவன் எப்போதும் இப்படியே உங்களுக்கு பிரியமுள்ளவனாக வாழவேண்டும்’’ என்று மனதிற்குள்ளாக ஜெபித்துக்கொண்டே தன் வீட்டை நோக்கி நடந்தான்.
சிறுவனான நோவா கடவுள் பயத்துடனும், பக்தியோடும், நீதியோடு வளர ஆரம்பித்தான். எப்போதும் கடவுளோடு சஞ்சரிக்கிறவனாக இருந்து வந்தான். நாட்களும், காலங்களும் கடந்தன.
பூமியில் மனிதர்கள் பெருகிக்கொண்டிருந்தனர். ஆதாமின் பிள்ளைகளான காயீன், சேத் இவர்களின் சந்ததிகள் ஒன்றோடு இணையாமல், இவர்களுக்குள் எந்த சம்மந்தமும் கலவாமல் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். காயீனின் சந்ததியினர் கடவுளுக்கு பிரியமில்லாமல், அக்கிரமம் நிறைந்தவர்களாக இருந்தனர். சேத்தின் சந்ததியினர் கடவுளின் பராமரிப்பில், கடவுளின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து, கடவுளை தொழுது எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.
காயீன் வம்சத்தில் பிறந்த பெண் பிள்ளைகள் மிகவும் அழகுள்ளவர்களாக இருந்தனர். இதனால் சேத்தின் வம்சத்தில் வந்த வாலிபர்கள் காயீன் வம்சத்தில் வந்த பெண்பிள்ளைகளை அதிகமாக நேசித்தனர்.
ஜனங்களின் வாழ்வை சீரழிக்க ஆதி முதலே திட்டம் தீட்டி தந்திரமாக செயல்பட்டுக்கொண்டு, கடவுளை விட்டு எல்லா மக்களையும் பிரித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த பிசாசுக்கு இந்த இரண்டு சந்ததிகளையும் கலந்து விட்டால் என்னுடைய திட்டம் நிறைவேறும், அதற்கு இதுதான் சரியான நேரம் என்று தீர்மானித்து, காயீன் வம்சத்தில் உள்ள பெண் பிள்ளைகளின் மீது அதிகமான மோகம் கொள்ளும்படி, சேத்தின் வம்சத்தில் உள்ள வாலிபர்களை தன்வசப்படுத்தி அவர்களை செயல்பட வைத்தான்.
அவனுடைய சதிவலையில் வாலிபர்கள் விழ ஆரம்பித்தனர். ஒருநாள் சேத்தின் வம்சத்தில் உள்ள வாலிபன் தன்னுடைய தகப்பனிடத்தில் சென்று, தயக்கத்துடன் நின்றான். அதை கவனித்த அவனுடைய தகப்பன் “என்னப்பா எதாவது என்னிடத்தில் கேட்க வேண்டுமா? ஏன் தயக்கத்துட்ன நிற்கிறாய்’’ என்று கேட்டார். “ஆமாம் அப்பா, அனால் அதை எப்படி உங்களிடம் சொல்லுவது என்று என்க்கு தெரியவில்லை. அதனாலதான்..’’ என்று சொல்ல “என்னிடத்தில் பேசுவதற்கு உனக்கு ஏன் தயக்கம் எதுவாக இருந்தாலும் சொல்’’ என்றார் தகப்பன்.
“நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன், அந்த பெண்ணையே திருமணம் செய்யலாம் என்று நினைக்கிறேன். அதான் உங்களின் அனுமதி வேண்டும்’’ என்று தயங்கி, தயங்கி சொல்லி முடித்தான். ஒருகணம் திகைத்த தகப்பன் சுதாரித்துக்கொண்டு, “அப்படியா, சரி யார் அந்த பெண். என்று கேட்டதும், “அது வந்துப்பா, அவள் காயீன் வம்சத்து பெண்’’ என்று சொல்லி முடிக்கும் முன் “உனக்கு என்ன தைரியம், அவர்கள் கடவுளுடைய சமூகத்தை விட்டு விலகி வாழ்பவர்கள், கடவுளை அறியாமல் கடவுளை வழிபடாமல் தங்கள் சுய இஷ்டத்தின் படி பொல்லாதவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்களோடு நாம் சம்மந்தம் வைத்துக்கொண்டால் நாமும் அவர்களைப்போல கடவுளை விட்டு வழிவிலகிப் போகவேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
அவர்களோடு நாம் எந்த சம்மந்தமும் செய்வது இல்லை, பெண் கொடுப்பதோ, பெண் டுப்பதோ இல்லை. இது தெரிந்தும் எப்படி நீ என்னிடம் வந்து இப்படிப்பட காரியத்தை கேட்கலாம். நீ கேட்கும் காரியம் கடவுளுக்கே பிடிக்காது. ஆகவே இனி இதைக் குறித்து என்னிடம் இனி பேசாதே, அந்தப் பெண்ணை மறந்துவிடு’’ என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு வேகமாக சென்று விட்டார்.
ஆனால் அவனுக்குள் இருந்த அழகின் மயக்கம், 'சரியா? தவறா?', 'நல்லதா? கெட்டதா?' என்பதை சிந்திக்க விடாதபடிக்கும், 'இது தேவனுக்குப் பிரியமா? அவருக்கு பிடிக்குமா?' என்பதை எல்லாம் யோசிக்க விடாதபடிக்கு அவனை அழுத்தவே அவன் தனது குடும்பத்தாருக்கு தெரியாமல் அந்த பெண்ணையே மணந்து கொண்டான்.
இப்படிப்பட்ட செயல்களில் அநேகர் ஈடுபட்டதால், அதுவரை தனித்தனியாக வாழ்ந்து வந்த தேவ பயமற்ற காயீன் சந்ததியும், தேவ பயமுள்ள சேத்தின் சந்ததியும் ஒன்றொடு ஒன்று கலக்க ஆரம்பித்தன.
காயீன் சந்ததியுடன், சேத்தின் சந்ததியினர் தங்களுக்குப் பிடித்தமான பெண்களை தெரிந்து கொண்டனர். இவ்விதமாக இரண்டு சந்ததிகளும் இணைந்த பொழுது, அந்த பெண்கள் சேத்தின் வம்சத்தில் உள்ளவர்களையும் கடவுளை விட்டு வழிவிலகிப் போகும்படியாகச் செய்தனர்.
இது கடவுளின் பார்வையில் மிகவும் பொல்லாப்பாக இருந்தது. கடவுளின் ஆலோசனைகளுக்கும், வழிநடத்துதலுக்கும் வர்கள் கீழ்ப்படியாதபடியால் “என் ஆவி இவர்களோடே என்றைக்கும் போராடுவதில்லை. வர்கள் மனிதர்கள்தானே, இனி வர்கள் இந்த பூமியில் இருக்கும் வருஷம் நூற்றிருபது வருஷம்’’ என்று கர்த்தர் சொன்னார்.
சேத்தின் வம்சமும், காயீனின் வம்சமும் கலந்ததினால் அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளும் கடவுளுக்கு விரோதமான செயல்களிலேயே  ஈடுபட ஆரம்பித்தனர். கடவுளைக் குறித்த பயமும், கடவுளின் வார்த்தைகளின்படி நடக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லாமல், அவனவன், அவனவன் பார்வைக்கு நலமானபடி பொல்லாத  வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர்.
பாலியல் ஒழுக்க நெறிகள் மீறப்பட்ட, ஒருவர் பலருடன் உறவு கொள்ளவும், பெண்கள், பெண்களோடும். ஆண்கள், ஆண்களோடும் உறவு கொள்ளும் ஒழுங்கீனமான செயல்களும் பெருகின. நித்தம் நித்தம் கொலைகளும், கொள்ளைகளும் செய்து இராட்சதர்களாய் வாழ்ந்தனர்.
வாலிப வயதை அடைந்த நோவா, இவைகளை எல்லாம் பார்த்த போது வேதனை அடைந்தான். அந்த நாட்களில் இருந்தவர்களுக்குள்ளே நோவா மிகவும் நேர்மையானவனாக, உண்மை உள்ளவனாக, உத்தமனாக, கடவுளுக்கு பயந்தவனாக, எப்போதும் கடவுளின் வார்த்தைகளின் படி நடப்பவனாக இருந்து வந்தான்.
நோவாவிற்கு கடவுளின் இரக்கமும், தயவும் கிடைத்தது. ஒருநாள் நோவா தனிமையாக இருந்த போது “நோவா, நோவா’’ என்ற சத்தம் கேட்டது. யார் என்னை கூப்பிடுகிறார்கள். எங்கிருந்து இந்த சத்தம் வருகிறது என்று திகைத்தவனாக நோவா அங்கும் இங்கும் சுற்றி பார்த்தான். மறுபடியும் அதே சத்தம் கேட்டது.
“மனிதர்கள் என் வழிகளை விட்டு விலகி, தங்கள் வழியைக் கெடுத்துக்கொள்கிறார்கள். இவர்களை உண்டாக்கியதற்காக நான் மனஸ்தாப்படுகிறேன்’’ என்ற ஒரு கம்பீரமான குரல் கேட்டது. அப்பொழுது கடவுள் தான் தன்னை கூப்பிடுகிறார் என்பதை அறிந்த நோவா, கடவுளுக்கு முன்பாக பணிந்து நின்றான். கடவுளின் இந்த வார்த்தைகளை கேட்டது முதல் முன்பிலும் அதிகமாக  கலங்க ஆரம்பித்தான்.
நாளுக்கு நாள் மனிதர்களின் அக்கிரமம் பூமியில் பெருக ஆரம்பித்தன. இவைகளை எல்லாம் பார்க்க, பார்க்க நோவாவின் மனது மிகவும் வேதனை அடைந்தது. இதையே நினைத்து துயர் கொண்டிருந்த நோவா சரியாக சாப்பிடாமல் தூங்காமல் எப்போதும் தனிமையிலேயே இருந்து வந்தான். தன்னுடைய மகனின் நடவடிக்கைகளை கவனித்த லாமேக் "நோவா, ஏன் எப்போதும் சோகமாகவே இருக்கிறாய், சரியாக சாப்பிடுவது இல்லை. யாரிடமும் பேசுவது இல்லை. உனக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி இருக்கிறாய்’’ என்று கேட்டார்.
அப்பொழுது, கடவுள் தன்னிடம் பேசியதையும், மக்களின் அக்கிரம நடவடிக்கைகளையும் சொல்லி “ஏன் இந்த மக்கள் இப்படி நடந்து கொள்ளுகிறார்கள். அன்பான நமது கர்த்தர் நமக்கு வேண்டிய எல்லாவற்றையும் இந்த பூமியில் படைத்து, நம்மை நேசித்து நம்மை பாதுகாத்தும் பராமரித்தும் வருகிறார். இந்த நல்ல கடவுளின் வார்த்தைகளை கேட்காதபடிக்கு இப்படி தங்களின் வாழ்வை வீணாக்குகிறார்களே என்பதை நினைக்கும் போது என்னால் வேதனைப்படாமல் இருக்க முடிய வில்லை’’ என்று சொல்லும் போதே நோவாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.
“நீ சொல்லுவது உண்மைதான் நோவா, கடவுளைக்குறித்த எந்த ஒரு உணர்வும் இல்லாமல் இப்படி மனிதர்கள் நடந்து கொள்வது வேதனையாகத்தான் இருக்கிறது. நாம் என்ன செய்வது, உலகமே அப்படித்தான் இருக்கிறது. நாம் கர்த்தரின் வார்த்தைகளின்படி அவருக்கு பிரியமாக நடந்து நம்மைக் காத்துக் கொள்வோம். நாம் சொன்னால் அவர்கள் கேட்கவா போகிறார்கள்’’ என்று லாமேக்கு சொன்னார்.
“நமக்கென்ன நமக்கென்ன  என்று நாம் இருந்து விட்டால், இவர்களை காப்பாற்றுவது யார்? கர்த்தர் நம்மை தெரிந்து கொண்டிருக்கிறார். நாம் இவர்களுக்கு கர்த்தரின் வழிகளைச் சொல்ல வேண்டாமா?’’ என்று மிகவும் ஆவேசமாக பேசினான் நோவா.
“நீ சொல்லுவது உண்மைதான் நோவா, ஆனால் இந்த மக்கள் கேட்க வேண்டுமே, கேட்காத இவர்களிடத்தில் போய் நாம் என்ன சொல்லுவது. சரி சரி இதை எல்லாம் போட்டுக் குழப்பிக் கொண்டு நீ உன்னுடைய உடம்பைக் கெடுத்துக்கொள்ளாதே, சரியான நேரத்திற்கு சாப்பிடு’’ என்று சொல்லிவிட்டு, போய்விட்டார்.
நோவாவின் இருதயம் கனத்திருந்தது, கண்களில் நீர் ததும்பிக் கொண்டிருந்தது இவர்களை என்ன செய்து நல்வழிப்படுத்துவது என்று எண்ணியபடியே அமர்ந்திருந்தான்.
நாட்கள் கடந்தன, நோவாவிற்கு திருமணம் செய்ய தீர்மானித்த லாமேக்கு, அவனுக்கு கடவுளுக்கு பயந்து, பொல்லாப்புக்கு விலகி, கடவுளின் வழியில் வாழ்ந்து வந்த பெண்ணை நோவாவிற்கு திருமணம் செய்து வைத்தார்.
திருமண வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருந்த நோவா, “இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது, இந்த மக்கள் கடவுளால் படைக்கப்பட்டவர்கள். இந்த உலகமும், இந்த மக்களும் கடவுளின் ஆளுகைக்கு உட்பட்டு, எல்லோரும் ஒற்றுமையாக, சமாதானமாக வாழவேண்டும். அதற்கு இந்த மக்கள் கடவுளின் வார்த்தைகளின் படி தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். இதற்காக நம்மால் முடிந்த மட்டும், எல்லோரிடமும், கடவுளின் வார்த்தைகளை குறித்து அறிவிக்க வேண்டும்’’ என்று தன்னுடைய மனைவியிடம் அடிக்கடி பேசுவான்.
அவன் பேசுவதை எல்லாம் கவனமாக கேட்கும் அவனுடைய மனைவி, “நீங்க சொல்லுவது உண்மைதாங்க, இந்த மக்கள் கடவுளைக்குறித்தும், அவருடைய அன்பைக்குறித்தும், அவருடைய நீதியை குறித்தும், அறியாமல் இப்படி தங்களை தாங்களே கெடுத்துக்கொள்கிறார்கள். கடவுளைக்குறித்து அறிந்திருக்கிற நாம் நமது தலைமுறை மக்களுக்கு கடவுளைக்குறித்தும், அவருடைய நீதியைக்குறித்தும் சொல்லா விட்டால் அந்த குற்றம் நம்மையே சேரும். எனவே நாம் சொல்லுவதை சொல்லியே ஆக வேண்டும்’’ என்று நோவாவின் எண்ணங்களுக்கு பக்கபலமாக இருந்து அவன் விரும்பிய படி செயல்பட உற்சாகப்படுத்தி வந்தாள்.
நாளுக்கு நாள் ஜனங்களின் பொல்லாப்பும்,
அக்கிரமும், அநீதியான செயல்களும் மேலும் பெருகிகொண்டே இருந்தது. கடவுளின் வழிகளில் நடப்பவர்களும், கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடப்பவர்களும் மிகவும் குறைவாகவே இருந்து வந்தனர்.
இந்நிலையில் நோவாவிற்கு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களுக்கு சேம், காம், யாப்பேத் என்று பெயர் வைத்தனர். நோவா பிள்ளைகளுக்கு கடவுளைக்குறித்து சொல்லி ஒழுக்கமாக கர்த்தரின் வழிகளில் நடத்தி வந்தான்.
இந்நிலையில் ஒருநாள் நோவா கடவுளின் சந்நிதானத்தில் இருக்கும் போது கர்த்தர் அவனிடத்தில் பேசினார் “இம்மனிதர்களின் அழிவுக்காலம் நெருங்கிவிட்டது, அவர்களாலே பூமி கொடுமையால் நிறைந்திருக்கிறது. நான் அவர்களை பூமியோடு கூட அழிக்கப் போகிறேன்’’ என்றார்.
இதைக் கேட்ட நோவா நடு நடுங்கி கடவுளுக்கு முன்பாக தன்னை முழுவதுமாக தாழ்த்தி வேண்டுதல்களோடு நின்றான்.
“இப்படிப்பட்ட மனிதனையா நான் படைத்தேன் இல்லை. நான் படைத்த மனிதர்கள் இவர்கள் அல்ல. இப்படிப்பட்ட மனிதர்களுக்காக நான் வேதனைப் படுகிறேன். இவர்களின் செயல்கள் என்னுடைய மனதிற்கு துக்கமாக இருக்கிறது’’ என்று கடவுள் பேச பேச நோவா அமைதியாக கடவுளின் வார்த்தைகளை கவனமாக கேட்டுக்கொண்டிருந்தான்.
“நான் சிருஷ்டித்த மனிதனைப் பூமியில் வைக்காமல், மனிதன் முதற்கொண்டு, மிருகங்கள், ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் என்று இருக்கிற எல்லாவற்றையும் அழித்துப்போடுவேன். அதற்கு முன்பாக நான் உனக்கு சொல்லுகிறபடி எல்லாம் நீ செய்ய வேண்டும்’’ என்று கர்த்தர் சொன்ன பொழுது, “நீங்கள் சொல்லுகிறவைகளை நான் கட்டாயமாக செய்கிறேன்’’ என்று நோவா கடவுளின் சந்நிதானத்தில் நின்றான்.
கடவுள் நோவா செய்யவேண்டியவைகளை சொல்ல ஆரம்பித்தார். கடவுள் என்ன சொல்ல போகிறார் என்று பயத்தோடு எதிர்பார்த்து நின்றான்.

தொடரும்........
ஆதியாகமம்   6ம் அதிகாரத்தில் இருந்து........
     


0 comments:

Post a Comment