Bread of Life Church India

எல்லாவற்றையும் செய்து முடித்தவர்

`எனக்காக யாவையும் செய்து முடிக்கப் போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்' '(சங் 57:2) இந்த சங்கீதத்தை தாவீது எந்த சூழ்நிலையில் எழுதினார் என்று மேலே வாசிக்கும் போது விளங்கி கொள்ளலாம்.
    தனது உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலையில்,  சவுலுக்கு  தப்பியோடிக்
கொண்டிருக்கும் பொழுது ``எனக்காக யாவையும் செய்து முடிக்கப் போகிற  தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்'' என்று விசுவாசத்துடன் அறிக்கையிட்டு கூப்பிட்ட தாவீதின் கூப்பிடுதலின் சத்தத்திற்கு செவிகொடுத்து உயர்த்தின தேவன் இன்றைக்கும் நம்மோடு உண்டு.

    அதுமாத்திரமல்ல இன்றைக்கு நமக்காக எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டார். இந்த நல்ல தெய்வத்திடமிருந்து நாம் நமக்குரிய நன்மைகளை எப்படி பெற்றுக்கொள்வது ?
    தாவீது தேவனிடம் பெற்றுக்கொண்டதின் இரகசியங்களை நாம் அறிந்து கொண்டால் நம்முடைய ஆசீர்வாதங்களையும் நாம் எளிதாக சுதந்தரித்து கொள்ளலாம்.

தேவ இரக்கம்

    முதலாவது தாவீது ``எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்'' (சங் 57:1) என்று தேவனுடைய இரக்கத்திற்காக மன்றாடுகிறார். வேதம் கூறுகிறது ``விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல இரங்குகிற தேவனாலேயாம்'' (ரோமர் 9:16) தேவ இரக்கம் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை தாவீது நன்றாக அறிந்து வைத்திருந்தார்.
    சிலருடைய வாழ்க்கையில் ஒரு சில பகுதியில் விடுதலையில்லாமல் இருக்கும் அப்படிபட்ட சூழ்நிலையில் தேவனுடைய இரக்கத்திற்காக தேவனை நோக்கி காத்திருக்க வேண்டும்.
    அந்த நேரங்களில் பாவ அறிக்கை செய்ய வேண்டியது இருக்கலாம்,பிறரை மன்னிக்காமல் கசப்பை வைத்திருந்தால் பிறரை மன்னித்து கசப்புகளை நீக்க வேண்டியது இருக்கலாம், மற்றவர்களுக்கு விரோதமாக கலகம் செய்திருந்தால் மன்னிப்பு கேட்டு ஒப்புரவு ஆகவேண்டியது இருக்கலாம், தேவ சமூகத்தில் தாழ்த்தாமல் இருந்தால் முழுவதும் தாழ்த்த வேண்டியது இருக்கலாம்,
    இப்படியாக தேவ சமுகத்தில் ஆராய்ந்து பார்த்து தேவனுக்கு பிரியமில்லாதவைகளை விட்டு விடும் பொழுது  நமக்காக யாவையும் செய்து முடித்த இயேசு கிறிஸ்து நமக்காக பிதாவிடம் பரிந்து பேசுகிறார்,  நமக்கு  தேவ இரக்கம் உண்டாகிறது,

தேவனை அண்டிக் கொள்ளுதல்

    ``உம்மை என் ஆத்துமா அண்டிக் கொள்ளுகிறது'' (சங் 57:1) தேவனோடு தன் ஆத்துமாவை தாவீது இணைக்கிறார். இதன் இரகசியம் என்னவென்றால் தன்னுடைய மன பாரங்கள், கவலை, பயம், சஞ்சலம், ஏமாற்றம் எல்லாவற்றையும் தேவன் மேல் வைத்து விடுகிறார். ``கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்து விடு, அவர் உன்னை ஆதரிப்பார்''   (சங் 55:22) என்று வேதம் கூறுகிறது.
    கர்த்தரை அண்டிக் கொண்டு அவர் மேல் பாரத்தை வைக்கும் பொழுது என்ன நடக்கிறது, கர்த்தர் தரும் சமாதானம், சந்தோஷம், எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் பெலன், வல்லமையை பெற்றுக் கொள்ளுகிறோம்.
    இதைத்தான் தாவீது நன்றாக அறிந்திருந்தார், ``ஆபத்துக்கள் என்னை சூழ்ந்திருக்கிறது.  என்னை விடுவிப்பவரும், பாதுகாப்பவருமான என் தேவனே நான் உம்மை அண்டிக் கொள்ளுகிறேன்'' என்று அவர் தேவனை அண்டிக் கொள்ளுகிறார்.
  பிரியமானவர்களே! நம்முடைய வாழ்க்கையிலும்கூட எத்தனையோ விதங்களில் பிரச்சனைகள் சூழ்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாமும் திகைத்து நிற்காமல் தைரியமாய் போராடி ஜெயிக்க வேண்டுமானால், நம்முடைய ஆத்துமா தேவனையே அண்டிக் கொண்டிருக்க வேண்டும்.  
 
தேவனுடைய பாதுகாப்பு

   இந்த உலகத்தில் பாடுகள் பிரச்சனைகள் வேதனைகள் சூழ்ந்திருந்த வேளையில்,  தாங்க முடியாத சுமையுடன் இருந்த தாவீது ``விக்கினங்கள் கடந்து போகும் மட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன் . (சங் 57:1) என்று தேவனுடைய பாதுகாப்புக்குள்ளாய் தன்னை ஒப்படைக்கிறார்.
``உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் '' (சங் 91;1) தேவடைய பாதுகாப்பில் வந்தவர்களுக்கு எந்த ஒரு சேதமும் ஏற்படுவதில்லை, எப்படிபட்ட ஆபத்துகள் சூழ்ந்து வந்தாலும் ஒன்றும் அணுக முடியாது.
    நம்முடைய வாழ்க்கையில் நாம் எந்த அளவுக்கு தேவனுடைய பாதுகாப்பில் நம்மை கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு நமது வாழ்வில் தேவனுடைய பாதுகாப்பு அதிகமாகும். வியாதியோ, வறுமையோ சமாதான குறைவோ, வேண்டாத பிரச்சனைகளோ, சண்டைகளோ, நமது வாழ்வுக்கு விரோதமாக சத்துரு எடுக்கும் எந்த ஒரு ஆயுதமும் நம்மை தாக்க முடியாது.
    பிரியமான அன்பு சகோதரனே! சகோதரியே! உங்களுடைய வாழ்க்கையில் கர்த்தருடைய பாதுகாப்பில் உங்களை  எந்த அளவுக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறீர்கள் என்று பாருங்கள்.
   தேவனுடைய பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாமல் இந்த பூமியில் நிம்மதியாய் வாழ்வதென்பது கூடாத காரியம். ``ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.  (1 பேதுரு 5:8) அவனுடைய வேலையே தேவனுடைய பாதுகாப்பிலிருந்து ஜனங்களை பிரித்தெடுப்பதும்,தேவனுடைய பாதுகாப்பை விட்டு விலகியிருப்பவர்களை அபகரிப்பதுவும்தான்.
    தேவனை விட்டு நீ எந்த அளவுக்கு தூரமாக செல்லுகிறாயோ அந்த அளவுக்கு பிசாசு உன்னை வஞ்சிக்க (ஏமாற்ற) ஆரம்பித்து விடுவான். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

யாவையும் செய்து முடித்தார்

    மனிதர்களுக்கு விரோதமாக இருந்த எல்லாவற்றையும் சிலுவையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து முறியடித்து விட்டார். இதை விசுவாசிக்கும் பொழுது, இயேசு கிறிஸ்துவினால் நமக்கு எல்லாவற்றின் மேலும் ஜெயம் கிடைக்கிறது.
    அவரை நோக்கி கூப்பிடும் பொழுது அவர் நமது அருகில் வந்து நம்மை அரவணைக்கிறார், தேற்றுகிறார், பராமரிக்கிறார், பாதுகாக்கிறார், நம்மை நடத்துகிறார்.
     கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும்  ஆசீர்வதிப்பாராக! கவலைப்படாமல் இருங்கள், பயப்படாமல் இருங்கள். ``யாவற்றையும் செய்து முடித்தஇயேசு கிறிஸ்து உங்களோடிருக்கிறார்''              

0 comments:

Post a Comment