பருவ நிலை மாற்றம்
ஒரு தகப்பன் தனது இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆக வேண்டும்,
நல்ல மணமகன் வாழ்க்கை துணையாக கிடைக்க வேண்டும் என்று ஜெபித்துக்கொண்டிருந்தார்.
தேவன் அவருடைய விண்ணப்பத்தைக் கேட்டு அவருடைய இரண்டு மகள்களுக்கும் தேவனுக்கு
பயந்த நல்ல மணமகனை கொடுத்தார். ஒரு மணமகன் விவசாயம் செய்து வந்தார். இன்னொருவர்
குயவன் மண் பாத்திரங்கள் செய்து வந்தார்.
இவர்களின் திருமணங்கள் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.
தகப்பனுக்கும், பிள்ளைகளுக்கும் மிகுந்த சந்தோஷம். மகள்கள் இருவரையும் அவர்களின்
கணவன் வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார்.
சில மாதங்கள் ஆகி விட்டது. தகப்பன் தனது மகள்கள் எப்படி
இருக்கிறார்கள் என்று பார்த்து வரலாம் என்று மகள்களை பார்க்கும் படியாக புறப்பட்டு
சென்றார்.
முதலாவது விவசாயம் செய்யும் மகளை பார்க்கும் படியாக
சென்றார். தகப்பனார் சென்றதும் மூத்தமகள் “அப்பா வாங்க எப்படி இருக்கீங்க’’ என்று அன்பாக அழைத்து உபசரித்தாள். “என்னமா
எப்படி இருக்க உனது கணவர் உன்னை நல்லபடியாக கவனித்துக்கொள்கிறாரா? நீ சந்தோஷமாக
இருக்கிறாயா?’’ என்று கேட்டார்.
“அப்பா,எனது கணவர் என்னை மிகவும் நல்ல படியாக
கவனித்துக்கொள்கிறார். தேவ கிருபையால் நான் அதிகமான சந்தோஷத்துடன் இருக்கிறேன்’’ என்று சொல்லி அநேக விஷயங்களை பேசி விட்டு
“எங்கள் விவசாயத்திற்கு ஏற்றபடி மழைதான் நன்றாக பெய்ய வில்லை. நீங்கள் நல்ல மழை
பெய்ய வேண்டும் என்று எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்’’ என்று கூறினாள். தகப்பனும் “நல்லது மகளே,
நீங்களும் ஜெபியுங்கள். நானும் மழைக்காக ஜெபிக்கிறேன்’’ என்று சொல்லி விட்டு, ”நான்
புறப்படுகிறேன். அப்படியே உனது தங்கை வீட்டிற்கும் சென்று தங்கையையும் பார்த்து
விட்டு, நான் ஊருக்கு செல்கிறேன். போய் வருகிறேன் என்று சொல்லி விட்டு, தனது
அடுத்த மகளை பார்க்கும்படி சென்றார்.
இளைய மகளின் வீட்டிற்கு தகப்பன் போகிற
போதே, அந்த மகள் தனது தந்தை வருகிறதை கண்டு, வேகமாக ஓடி வந்து, அப்பா எப்படிப்பா
இருக்கீங்க, இப்பக்கூட உங்களைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்’’ என்று மகிழ்ச்சி
பொங்க விசாரித்து, வீட்டிற்குள் அழைத்துச்சென்றாள். மகளை பார்க்கும் போதே அவள்
மகிழ்ச்சியாக நல்லபடியாக இருக்கிறாள் என்று அறிந்து கொண்ட தகப்பன், “நீ எப்படிம்மா
இருக்கிறாய்’’ என்று கேட்டார். எனக்கு என்னப்பா, இயேசப்பா கிருபையில் ரொம்ப நல்லா
இருக்கிறேன்’’ என்றாள்.
சிறிது நேரம் இருந்து விட்டு, மகளுக்கு வேண்டிய ஆலோசனைகளை
கொடுத்து விட்டு, தகப்பன் புறப்பட ஆரம்பித்தார். உடனே மகள் “என்னப்பா வந்ததும்
வராததுமா உடனே புறப்பட்டு விட்டீர்கள். இரண்டு நாள் இருந்து விட்டு போகலாமே’’ என்று கேட்டாள். “ இல்லமா எல்லா வேலையையும்
விட்டு விட்டு, நீங்க எப்படி இருக்கீங்க என்று பார்த்து விட்டு போகலாம் என்றுதான்
வந்தேன்மா. தேவன் உங்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் நன்றாக வைத்திருக்கிறார்.
இன்னொரு முறை வரும் பொழுது இரண்டு நாள் தங்கி விட்டு போகிறேன்’’ என்று சொல்லி புறப்பட்டார்.
அப்பொழுது மகள் ”எல்லாம் நல்லபடியாகத்தான் இருக்கிறது
அப்பா, ஆனால் மழை அடிக்கடி பெய்கிறதினால், நாங்கள் செய்கிற மண் பாத்திரங்களை காய
வைக்க முடியாமல் சில நேரங்களில் கஷ்டமாக இருக்கிறது. எனவே, மழை வந்து அடிக்கடி
எங்களுக்கு தொல்லைகொடுக்காதபடிக்கு தயவு செய்து எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்’’ என்று சொன்னதும்,
தகப்பன் ஒரு கனம் திகைத்து போனார். இருப்பினும் உடனடியாக சுதாரித்துக்கொண்டு, “சரிம்மா
அப்படியே செய்கிறேன்’’ என்று சொல்லி விட்டு, தனது ஊருக்கு புறப்பட்டார்.
வருகிற வழியெல்லாம் அவருக்கு, தனது மூத்த
மகள் “மழை வேண்டும் அதற்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்’’ என்று சொன்னதும்,
இளைய மகள் “மழை எங்களுக்கு தொந்தரவாக இருக்கிறது ஆகவே வேண்டாம்’’ என்று
ஜெபித்துக்கொள்ளுங்கள்’’ என்று சொன்னதும் மாறி மாறி காதுகளில்
ஒலித்துக்கொண்டிருந்தன.
வீட்டிற்கு வந்தும் அந்த குழப்பம் நீங்க
வில்லை. நேராக தனது ஜெப அறைக்கு சென்றார். முழங்காலில் நின்று ஜெபிக்க
ஆரம்பித்தார். “தேவனே எனது மகள்களின் வாழ்க்கையில் உமது சித்தத்தின்படி எல்லாம்
நடக்கட்டும்’’ என்று ஜெபித்தார்.
“நாம் எதையாகிலும் அவருடைய
சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவி கொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம்
கொண்டிருக்கிற தைரியம்’’ ( 1 யோவான் 5:14 ).
“அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே
நேர்த்தியாகச் செய்திருக்கிறார்;’’ ( பிரசங்கி 3:11 )
0 comments:
Post a Comment