Bread of Life Church India

அக்கரை பச்சை


ஒரு சமயம் மாடுகள் பசுமையான புல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. அந்த புல் வெளியில் நடுவாக முள் வேலி தடுப்பு போடப்பட்டிருந்ததால், இந்த பக்கம் சில மாடுகளும், அந்தப்பக்கம் சில மாடுகளுமாக வேறு வேறு நபர்களின் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.

அந்த வேளையில் இந்தப் பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடு என்ன நினைத்ததோ தெரியவில்லை. அந்தப் பக்கம் உள்ள புற்களை மேயலாம் என்று முள் வேலிக்குள் தனது தலையை விட்டு எடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. இதே போல அந்தப்பக்கத்தில் உள்ள மாடும் இந்தப் பக்கத்தில் உள்ள புல் பசுமையாக தெரிந்ததால்   வேலிக்குள் தனது தலையை விட்டு திரும்ப எடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது.

இப்படியாக தனக்கு முன் இருக்கும் பசுமையான புல்லை விட்டு விட்டு, மற்ற இடத்தில் இருப்பது தான் நன்றாக தெரிகிறது என்று, அதை எடுக்க முயற்சித்து மாட்டிக்கொண்ட மாடுகளைப் போல்தான் சில மனிதர்களின் வாழ்க்கையும் இருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மற்றவர்களையே பார்த்து பார்த்து தங்களுடைய நல்ல வாழ்க்கையை கெடுத்துக்கொண்டவர்கள் அநேகர் உண்டு, எதற்கெடுத்தாலும் மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டு பார்ப்பதும், தன்னோடு மற்றவர்களை ஒப்பிட்டு பார்ப்பதும் அநாகரீகமான செயல் என்பதை அறியாமலேயே சிலர் அப்படியே வாழ்ந்து வருகின்றனர். இப்படிப்பட்டவர்கள் ஒரு நாளும் மகிழ்ச்சியாக இருப்பது இல்லை. தன்னிடம் எதுவுமே இல்லை என்று எப்போதும் துக்க முகத்துடன் தான் இருப்பார்கள்.
கர்த்தர் தனக்கு கொடுத்த வாழ்க்கையை எப்படி சந்தோஷமாக வாழ்வது என்று தெரியாமல், எப்போதும் கர்த்தரை குறை சொல்லி முறு முறுத்துக்கொண்டிருப்பதையே இப்படிப்பட்டவர்கள் வாடிக்கையாக கொண்டிருப்பார்கள்.
வாழ்க்கை என்பது மற்றவர்கள் நம்மை மெச்சும்படியாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல, வாழ்க்கை என்பது நமக்காக கர்த்தர் கொடுத்த அந்த வாழ்க்கையில் கணவன் மனைவியை நேசித்து, மனைவி கணவனில் அன்பு செலுத்தி, பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து மன மகிழ்ச்சியோடு, சந்தோஷமாக கர்த்தருக்கு பிரியமாக வாழவேண்டும். மற்றபடி நாம் விரும்புகிற எல்லாவற்றையும் கர்த்தர் நமக்கு கொடுத்து நம்மை நிரப்புவார்.
“போதுமென்கிற மனதுடனே கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம்’’ (1 தீமோத்தேயு 6:6).

0 comments:

Post a Comment