Bread of Life Church India

மேன்மையும், கனமும்.....

``ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும்
ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்'' <1நாளா 29:12>.
    இவ்வசனம் வேதாகமத்தில்  தாவீது இராஜாவின் ஜெபமாக இருக்கிறது. தேவனின் மகத்துவத்தையும் வல்லமையையும் அறிந்திருந்த தாவீது, தேவனிடமிருந்தே சகலவிதமான நன்மைகளையும்,  நிறைவான ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார்.

    சிலருக்கு எப்போதுமே தாழ்வு மனப்பான்மை உண்டு, மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டு பார்த்து, ``நான் அவர்களைப்போல இல்லையே'' என்று தனக்குள்ளாகவே எதிர்மறையான எண்ணங்கொண்டு, வாழ்க்கையை கசப்புடன் வாழ்ந்து வருவார்கள்.
    பிரியமானவர்களே ஒருவேளை நீங்களும் இவ்விதமாக எண்ணிக்கொண்டு சோர்ந்து போய் இருக்கலாம். உங்கள் பெலவீனத்தைக்குறித்தே எப்போதும் நினைத்துக்கொண்டு, கவலையுடனும். துக்கத்துடனும் நீங்கள் இருப்பீர்களானால் உங்களைப்பார்த்துத்தான் கர்த்தர் சொல்லுகிறார். ``உன்னை மேன்மைப்படுத்தவும் பலப் படுத்தவும் என்னுடைய கரத்தினால் ஆகும்'' என்று.
    உண்மையாக கர்த்தரை பின்பற்றும் எவரையும் தேவன் ஒருநாளும் பெலவீனங்களைப் பார்த்து தள்ளிவைக்கிறவர் அல்ல. மற்றவர்கள் வேண்டுமானால் நம்முடைய பெலவீனங்களை சொல்லி சொல்லி நம்மை வேதனைப்படுத்தி, புறக்கணிக் கலாம், ஆனால் மற்றவர்களால் புறக்கணிக்கப் படுகிறவர்களையே தேவன் பயன்படுத்துகிறார்.
    உலகத்தால் பைத்தியம்
என்று எண்ணப்படுகிறவர்களைக் கொண்டுதான் தேவன் தம்முடைய இராஜ்யத்தையே  கட்டுகிறார்.
    எனவே, நீங்கள் பெலவீனராக இருக்கலாம், ஆனால் விசுவாசம் இல்லாதவர்களாக இருக்கக்கூடாது. ஏனென்றால் ``பலமுள்ளவனுக் காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு <தேவனுக்கு> லேசான காரியம்'' <2 நாளா 14:11>.
    ஆனால் விசுவாசம் இல்லாதவர்களுக்கு தேவனால் உதவி செய்வது முடியாத காரியம். வேதம் சொல்லுகிறது. ``விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்'' < எபி 11:6>.
கர்த்தர் பயன்படுத்தும் பாத்திரம்...?
    முதியவர் ஒருவர்  தினமும் காலையில் தன் வீட்டிலிருந்து சற்று தூரத்திலுள்ள கிணற்றிலிருந்து  இரண்டு பானைகளில்  தண்ணீர் சுமந்து வருவார். இது அவரது அனுதின வேலை. அவர் தண்ணீர் எடுத்துவரும்  இரண்டு பானை களில் ஒன்று நல்ல பானை மற்றொன்று விரிசலுள்ள ஓட்டை பானை. இரண்டு பானைகளிலும் தண்ணீர் நிறைய பிடித்து கொண்டுவந்தாலும், ஓட்டை பானையில் தினமும் அரை பானை தண்ணீர்தான் வீட்டிற்கு வரும்பொழுது இருக்கும்.
    நாள்தோறும் இப்படி
ஓட்டை பானையின் நிலையை பார்த்து நல்ல பானை பரிகாசம் செய்து வந்தது. ஓட்டை பானை மிகவும் மனமுடைந்து தான் உருவாக்கப்பட்டதின் பயனை
முழுமையாக செய்து முடிக்க முடியவில்லையே என்று
வருந்தியது. சில நாட்களாக  தன் வேதனையை அடக்கி வைத்திருந்த ஓட்டை பானை தண்ணீர்  சுமந்து வரும் அந்த மனிதனிடம் ஒரு நாள் ``ஐயா என்னை தயவுசெய்து மன்னியுங்கள், பலவருட உழைப்பினால் என் உடல் தேய்ந்து, என்னால் பாதி தண்ணீரைத்தான் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் தர முடிகிறது . உங்கள் உழைப்பின் முழு பலனை என்னால் கொடுத்து உதவிசெய்ய முடியவில்லையே என்னும் இயலாமை என்னை வேதனைப்படவைக்கிறது ` என்றது.
    இதைக்கேட்டு அந்த முதியவர் சிரித்துக்கொண்டே.
``இன்று நாம் தண்ணீர் எடுத்துக் கொண்டு வீடு திரும்பும் போது நீ வரும் வழியை கவனமாக பார்'' ! `என்று கூறிவிட்டு அந்த இரு பானைகளையும் சுமந்தபடி வீடு நோக்கி நடந்தார்.
பானையும் அவ்வாறே பார்த்துக்கொண்டே வந்தது. . அதனுடைய பக்கத்தில் மட்டும் செடி கொடிகள் பூக்களுடன் பசுமையாக தென்பட்டது. வீடு வந்ததும் அந்த முதியவர் ஓட்டை பானையிடம் ` ``என்ன பார்த்தாயா? உன்னுடைய பக்கம் மட்டும்  இயற்கை வளத்துடன் செழிப்பாக எவ்வளவு அழகாக இருக்கிறது என்று.
    எனக்கு தெரியும் உன்னில் ஓட்டை இருக்கிறதென்று, ஆனாலும் நீ உழைக்க தயாராக இருந்ததால் உன்னையும் வேறு வழியில் பயன்படுத்திக் கொண்டேன்! இன்று உன்னால், நான் நடந்து சென்று வரும் களைப்பு தெரிய வில்லை. உன் விரிசலின் மூலம் நீ தண்ணீர் ஊற்றி  வருவதால் தானே, இயற்கையாக நீ வரும் பக்கம் மட்டும் மிகவும் செழிப்பாக இருக்கிறது. ஆகையால்தான் நான் எந்த வருத்தமும் இல்லாமல் உன்னை பயன்படுத்தி வருகிறேன். தூக்கி போடுவது எளிது. ஆனால் யார் என்ன வேலைக்கு பயன் படுவார்கள் என்பதை அறிந்து பயன் படுத்துவதே சிறந்தது. எனவே உன் இயலாமையை குறித்து வருந்தாதே, அல்லது உன்னால் செய்யமுடியாததை செய்ய முயற்சிக்காதே, உன்னால் முடிந்த தை செய்''. என்று முதியவர் பேச பேச.ஓட்டை பானையின் கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்கியது, தன் இரு
கரங்களையும் கூப்பி அந்த முதியவருக்கு நன்றி கூறியது.
    ஆம் பிரியமானவர்களே!  நம்மிடம் உள்ள பலவீனங்களை நினைத்து நாம் கலங்க வேண்டாம், நாம் எந்த நிலையில் இருந்தாலும் அவர் <இயேசு> நம்மை பயன்படுத்துவார். நாம் குறைவுள்ளவர்கள், எதற்கும் பயன் பட முடியாது என்று நாம் நினைத்து கொண்டிருக்கலாம். ஆனால் எதாவது ஒரு வகையில் அவர் நம்மை பயன்படுத்துவார்.
    ``என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்`        <2 கொரிந்தியர் 12:9>.
    நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல, தேவனுடைய கரத்தில் இருக்கிறோமா? என்பதுதான் முக்கியம்.

கனத்தைக் கொடுக்கும் கர்த்தர் 
  

    ``ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங் களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்கு மானவைகள், ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக் கொண்டால், அவன் பரிசுத்தமாக் கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்த மாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான். <2 தீமோ 2:20,21>.
கனமென்பது இரண்டு வகையாக இருக்கிறது.
1> மனிதனுக்குண்டான பொருள்களை வைத்து.
2> மனிதனின் நடக்கையை வைத்து. முதலாவது மனிதர்கள் மூலமாக வருவது, இரண்டாவது தேவன் மூலமாக வருவது.
    பொன்னோ வெள்ளியோ, மரமோ, மண்ணோ, எந்த பாத்திரமாக வேண்டுமானாலும் இருக்கலாம் தவறில்லை. ஆனால் எஜமான் பயன்படுத்தும் பாத்திரமாக இருக்க வேண்டும் அதுதான் முக்கியம். அதில்தான் கனம் உண்டு.
    பொன்னும், வெள்ளியுமான பாத்திரம் கனத்துக்குரியவை என்றும், மரமும் மண்ணுமான பாத்திரம் கனவீனத்துக்குரியவை என்றும், சிலர் போதிக்க கேட்டிருக்கிறேன். அந்த அர்த்தத்தில் இவ்வசனம் சொல்லப் படவில்லை. மண்பாத்திரமாக இருந்தாலும் பயன்படுத்தப்படும் பாத்திரமே கனத்துக்குரிய பாத்திரம் என்பதைத்தான் இவ்வசனம் வலியுருத்திக் கூறுகிறது.
    ஒரு ஏழைமனிதன் தன்னுடைய கடின உழைப்பினால் மீதப்படுத்தின பணத்தைக்கொண்டு வெகுநாள் ஆசையாய் வாங்க வேண்டும் என்றிருந்த தங்கத்தினால் ஆன பாத்திரம் ஒன்றை வாங்கி வீட்டில் வைத்திருந்தான்.
    அவன் சாப்பிட வரும்
போதெல்லாம் இந்த தங்கத்தட்டு எதிர்பார்த்துக்கொண்டே இருக்கும் ``இன்றைக்காவது தனது எஜமான் சாப்பிடுவதற்கு தன்னைப் பயன்படுத்தமாட்டாரா'' என்று ஒவ்வொரு நாளும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும்.         ஆனால் அந்த மனிதனும் வயது சென்றவனாக மரித்தும் போய்விட்டான். ஆனால் ஆசையாக வாங்கிவந்த தங்கத்தட்டில் ஒரு வேளைகூட அவன் உணவு சாப்பிடவில்லை.
ஏனென்றால் அதிகவிலை
கொடுத்து வாங்கிய பாத்திரம் பத்திரமாக வைத்திருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு,  எப்போதும் பயன்படுத்தும் மண்பாத்திரத்தையே தன் காலம் முழுவதும் பயன்படுத்தி வந்தான்.
    ஆனால் தன் எஜமானுக்கு ஒருவேளைகூட பயன்பட  முடியவில்லையே என்று தங்கத்தட்டு மிகுந்த வேதனை அடைந்தது.
    பிரியமானவர்களே ``நான் எல்லாவற்றிலும் மேலானவன், என்னைப்போல வேறுயாரும் இல்லை, என்னும் கர்வத்தோடும், பெருமையோடும் இருக்கும் ஒருவரையும், தேவன் பயன் படுத்துவதும், கனப்படுத்துவதும் இல்லை. அற்பமாக எண்ணப்பட்டு, ஒன்றுக்கும் உதவாதவர்களாக தள்ளப்
படுகிறவர்களையே தேவன் பயன்படுத்தி கனப்படுத்துகிறார்.
    எனவே பயன்படுத்தப்படும் பாத்திரமே கனத்துக்குரிய பாத்திரம், அதுதான் உண்மையான மேன்மை. உலகமனிதர்கள் நம்முடைய அந்தஸ்தை வைத்து நமக்கு பொறுப்பும் மரியாதையையும் கொடுக்கலாம். ஆனால் தேவனுடைய பார்வையில், தேவன் பயன்படுத்தவும்,
மேன்மைப்படுத்தவும்  விரும்பும் பாத்திரம் தாழ்மையின் பாத்திரம் மட்டுமே, எனக்கு ஒன்றும் இல்லையே என்றும், நான் ஒன்றுக்கும் உதவாத ஆள் என்றும் நினைத்துக்
கொண்டிருக்கும் உங்களைத்தான் தேவன் பயன்படுத்தி உயர்த்த விரும்புகிறார்.
    ஆகவே நாம் தேவனுக்குப்பயன்படுவோம், கனத்துக்குரியவர்களாக வாழ்வோம்.
   

0 comments:

Post a Comment