உறுதியான வாழ்வும், நிலையான நன்மையும்
``யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர் பற்றி மேலே கனி கொடுப்பார்கள்'' (ஏசாயா 37:31). யூதா தேசத்தை குறித்த வாக்குத்தத்தத்தை ஏசாயா தீர்க்கதரிசியின் வழியாக தேவன் கொடுக்கிறார். யூதா தேசத்திற்கு வந்த ஆபத்திலிருந்து தப்பி யார் எல்லாம் நிலைத்திருக்கிறார்களோ, அவர்கள் இனி உறுதியுடனும் நிறைவான நன்மையை பெற்றும் சுகத்துடன் வாழ்வார்கள் என்று தேவன் முன்பதாகவே வாக்குப் பண்ணுகிறார்.
யூதா தேசத்தை சந்தித்த புயல் எது? அது எப்படிப்பட்ட ஆபத்தை கொண்டு வந்தது என்று வேதத்திலே பார்க்கும் போது, தேவனுடைய வார்த்தையை மீறும்படியாகவும், தேவனுக்கு விரோதமான செயல்களை செய்யும் படியாகவும் பிசாசு ஜனங்களுடைய வாழ்க்கையில் பலவிதங்களில் போராடிக்கொண்டே இருக்கிறான். அவர்களின் நம்பிக்கையை குலைக்கும் படியாகவும், அவர்களை தேவனை விட்டு பிரிக்கும் படியாகவும் பல விதத்திலே பிரச்சனைகளை கொடுக்கிறான். இதில் வீழ்ந்து போனவர்கள் இருந்தாலும் பிசாசின் தந்திரங்களுக்கு தப்பி, பிசாசின் கிரியைகளுக்கு தப்பி, பிசாசுக்கு எதிர்த்து நின்று விசுவாசத்தில் உறுதியுடன் இருந்தவர்களைத்தான் கீழே வேர்பற்றி மேலே கனி கொடுப்பார்கள் என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது.
எந்த காலகட்டத்திலும் விசுவாச வாழ்க்கைக்கு பரீட்சையை தேவன் வைத்துக்கொண்டுதான் இருக்கிறார். பரீட்சைக்கு போகாதவர்களும் சரியாக எழுதாதவர்களும் அடுத்த கட்ட நன்மைக்கு செல்ல முடியாது. பரீட்சையை எதிர்கொண்டு ஜெயித்தவர்கள்தான் உயர்வுக்கும், நன்மைகளுக்கும் சொந்தக்காரர்கள்.
ஆகவேதான் வேதம் தெள்ளத் தெளிவாக போதிக்கிறது. ``நீங்கள் விசுவாசமுள்ள வர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசு கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்'' (2கொரிந்தியர் 13:5).
இந்த விசுவாச பரீட்சையை தேவன் ஆதியில் இருந்தே வைத்துக்கொண்டுதான் இருக்கிறார். பரீட்சையில் வென்றவர்கள் உறுதியான வாழ்க்கைக்கும், நிறைவான நன்மையையும் பெற்றிருக்கிறார்கள்.
இந்த தலைமுறையில் வாழ்ந்து கொண்டிருக்கிற நம்முடைய வாழ்க்கையும் பலனுள்ளதாகவும், நன்மையால் நிறைந்ததாகவும், நிலைத்திருக்க வேண்டும் என்றால் நாமும் சில விஷயங்களுக்கு தப்பியவர்களாக வாழவேண்டியது அவசியமாக இருக்கிறது.
எப்படிப்பட்ட காரியங்களுக்கு நாம் தப்பி நம்முடைய வாழ்க்கையை காத்துக்கொள்ள வேண்டும் என்று வேதவசனங்களின் அடிப்படையில் கவனிப்போம் கர்த்தர் நம்மை தொடர்ந்து நன்மைக்கு நேராக நடத்துவாராக.
உலகத்தில் உண்டான கேட்டுக்கு தப்பியவர்கள்.
``இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும் பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப் பட்டிருக்கிறது'' (2பேதுரு 1:4).
தப்பி வாழ்வது என்பது முன்மாதிரியான வாழ்க்கையை குறிப்பிடுகிறது. இந்த உலகம் பல விதமான அசுத்தங்களினால் நிறைந்திருக்கிறது.
இந்த உலகம் நம்மை எப்போதும் நெருக்கிக் கொண்டேதான் இருக்கிறது. உலகம் என்று இங்கு குறிப்பிடப்படும் பதம் தேவனுக்கு எதிரான செயல்பாடுகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
ஆதி முதலே மனிதகுலம் இரண்டு வகையில் பிரிந்தேதான் வந்து கொண்டிருக்கிறது. ஒன்று தேவனுடைய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தேவனுக்கு பிரியமாக வாழுதல், மற்றொன்று தேவனுடைய சட்ட திட்டங்களை கவனிக்காது, தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக வாழுதல். இப்படியாக அன்றும் இன்றும் என்றுமே மனிதர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
நோவாவின் காலத்தில் வாழ்ந்து வந்த மனிதர்களைக்குறித்து வேதம் சொல்லும் பொழுது அவர்களின் அக்கிரமம் பூமியில் மிகவும் பெருகி இருந்ததை கண்ட தேவன் பூமியை அழிப்பேன் என்று சொல்லுகிறார்.
ஆனால் ``விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக் குறித்துத் தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக் குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்''(எபிரெயர் 11:7) என்று வேதம் கூறுகிறது.
தன்னுடைய காலத்தில் வாழ்ந்த மக்களைப்பார்த்து தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல், அநீதிக்கு தப்பி, தேவனுடைய நீதிக்கு உட்பட்டு தனது வாழ்க்கையை நோவா அமைத்துக் கொண்டார். ஆகையால் தான் நோவாவுக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.
மற்றமனிதர்களின் வாழ்க்கை முறையைவிட நோவாவின் வாழ்க்கை முறை வித்தியாசமாக இருந்தது. எப்போதும் தேவனுக்கு பயந்து, தேவனுக்கு பிரியமாக இருக்கவும், தேவனையே சார்ந்து கொண்டு, தேவனோடு சஞ்சரிக்கிறவனாக இருந்தார்.
முழுஉலகமும் அழிக்கப்பட்டாலும் உலகமக்களால் உண்டான கேடான வாழ்க்கை முறைக்கு தப்பியதால், நோவாவின் குடும்பம் அழிவிற்கு தப்பி உறுதியான வாழ்வையும், நிலையான நன்மையையும் பெற்றுக்கொண்டனர்.
பிரியமானவர்களே, தற்போதுள்ள இந்த உலகமும் அழிவுக்கு என்றுதான் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த அழிவில் இருந்து தப்பித்து, உறுதியான இவ்வுலக வாழ்வையும், நிலையான பரலோக வாழ்வையும் பெற்றுக் கொள்ளவேண்டுமானால், இந்த உலகத்தில் உண்டாகி இருக்கும் கேட்டுக்கு தப்பியவர்களாக நமது வாழ்க்கை இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் வந்து ஆபத்துக்கு தப்பியவர்கள்
சில வருடங்களுக்கு முன்பாக இயேசு கிறிஸ்துவை அறிந்திராத ஒரு குடும்பத்தில் புயல் வீச ஆரம்பித்தது. ஆறுமாதத்திற்கு ஒருமுறை அந்த குடும்பத்தில் உள்ள நபர் யாராவது ஒருவர் மரித்துக்கொண்டே இருந்தனர். தொடர்ந்து இரண்டு மூன்று நபர்கள் மரிக்கும் வரை ஒன்றும் தெரியவில்லை. ``மரணம் என்பது இயற்கைதானே இதை யார் தடுக்கமுடியம் எல்லாம் விதியின் செயல்'' என்று நினைத்துக் கொண்டனர்.
அந்த அவலம் மேலும் தொடர அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு பயம் வந்துவிட்டது. ``இது இயற்கையாக நடக்கவில்லை. வேறுவிதமாக தெரிகிறது''. என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டனர்.
அந்த குடும்பத்தில் நடந்து கொண்டிருக்கிற மரணம் ஒன்று விபத்தாக இருக்கிறது. அல்லது தற்கொலையாக இருக்கிறது. அதுதான் மற்றவர்களுக்கு ஏற்பட்டபயத்திற்கு காரணம்.
உடனே அவர்கள் எங்கு எங்கெல்லாமோ செல்கிறார்கள். யார் என்ன பரிகாரம் சொன்னாலும் செய்து வந்தார்கள். ஒன்றும் பயன் இல்லை. தங்களால் இயன்றமட்டும் தங்கள் பலத்திற்கு மீறியும் செலவு செய்து சோசியர்கள், மந்திரவாதிகள் என்று பார்த்து வந்தும் அந்த குடும்பத்தின் நிலை மட்டும் மாறவே இல்லை.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஊழியம் செய்கிற ஒரு சகோதரி அந்த வீட்டாரை சந்தித்து, அவர்களிடத்தில் பேசும் பொழுது, தங்கள் குடும்பத்தில் சமீபகாலமாக அடித்து வரும் புயலால் குடும்பம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்று கண்ணீரோடு தங்கள் நிலையை சொல்லியிருக்கிறார்கள்.
உடனே அந்த சகோதரி அவர்களுக்காக பாரத்துடன் ஜெபித்து, இதெல்லாம் பாவத்தினாலும் சாபத்தினாலும் உண்டாகி கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட பாவத்தையும் சாபத்தையும் நீக்கி உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்க ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவால் மட்டுமே முடியும் எனவே நீங்கள் குடும்பமாக உடனே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லி மேலும் பைபிளை குறித்தும் இயேசு கிறிஸ்துவைக்குறித்தும் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள்.
அதைக் கேட்டவுடன் அவர்களுக்கு தயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் ``சரி'' என்று சொல்லியிருக்கிறார்கள். சரி என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் அந்த குடும்பத்தாருக்கோ மிகுந்த குழப்பம் ``நம்முடைய சூழ்நிலையை அறிந்து உடனே நம்மை மதம் மாற்றப்பார்க்கிறார்களே'' என்று நினைத்தாலும் ``இதுவரை நாம் போகாத இடம் இல்லை, பார்க்காத சோதிடர்களோ, மந்திரவாதிகளோ இல்லை. செய்யாத பரிகாரம் இல்லை. இருந்தாலும் ஒன்றும் நமக்கு பயன் அளிக்கவில்லை.
இந்த இயேசுவிடம் சென்றாலாவது நம்முடைய ஆபத்தில் இருந்து விடுதலை கொடுக்கிறாரா பார்க்கலாம் என்று முடிவு செய்து, அடுத்த முறை ஊழியம் செய்கிற சகோதரி அவர்கள் வீட்டிற்கு சென்ற பொழுது அவர்களோடு திருச்சபைக்கு செல்ல ஆரம்பித்தனர்.
தொடர்ந்து செல்ல செல்ல அது வரை அந்த குடும்பத்தில் இல்லாத சமாதானமும், நிம்மதியும் கிடைப்பதை உணர ஆரம்பித்தனர். சில ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருந்த துர்மரணங்கள் அந்த குடும்பத்தில் இல்லாமல் போனது. அந்த குடும்பம் பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும் நீக்கப்பட்டு, தேவ சமாதானத்தைப்பெற்றது.
முழுமையாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அந்த குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
பிரியமானவர்களே, இந்த உலகத்தின் அசுத்தங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் அழிவை ஏற்படுத்தி, ஒன்றுமில்லாமல் செய்யப்பார்க்கிறது. சரியான நேரத்தில் உலகத்தில் உண்டான கேட்டுக்குத் தப்பி இயேசு கிறிஸ்துவை பிடித்துக்கொள்ளும் பொழுது, உறுதியான வாழ்வையும், நிலையான சந்தோஷத்தையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தருகிறார்.
கிறிஸ்துவில் நிலைத்திருந்து வளம் பெற்றவர்கள்
கீழே நன்றாக வேர் பற்றுகிற மரம்தான் மேலே கனிகொடுக்க முடியும். ``நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது'' (யோவான் 15:5) என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார்.
``நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் , நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும்''
(யோவான் 15:7).
இயேசு கிறிஸ்து என்னும் அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டவர்களின் வாழ்க்கையில் என்ன பிரச்சனைகள் வந்தாலும் அது ஒரு போதும் அவர்களை மேற்கொள்ளவே முடியாது.
எந்த சூழ்நிலையிலும் உலக வழக்கத்தின் படியாக சென்று விடாதபடிக்கு கர்தருக்கென்று வைராக்கியமாக இருக்கும் உங்களுக்கு நிச்சயமாக கர்த்தர் தமது நன்மைகளை நிறைவாகத் தந்து உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பார்.
தேவனை அறியாமல் வேதத்துக்கு புறம்பாக செயல்படுகிறவர்களின் வாழ்க்கை இன்றைக்கு செழிப்பாக இருப்பது போல தெரியலாம். நீங்கள் தேவனுக்கு பிரியமாக உண்மையாக இருந்தும் ஒன்றுமில்லாமல் வெறுமையாக இருப்பது போல இருக்கலாம்.
சோர்ந்து போகாதீர்கள். தேவனை அறியாமல் துன்மார்க்கமாக வாழ்பவர்களின் நிலையோ காற்றடித்தால் பறந்து போகும் குப்பைகளுக்கு சமமாக இருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது.
துன்மார்க்கன் செழிப்பாக இருப்பது போல தெரியும் ஆனால் எப்போது காணாமல் போவான் என்று தெரியாது. ஆனால் கிறிஸ்துவுக்குள்ளாக உண்மையாக இருந்து, அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ்கிறவர்களின் வாழ்க்கையோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்
கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக பாடுபடுகிறவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் அதற்குண்டான பலன்களை பெற்றுக்கொள்வார்கள்.
கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக உலகத்தின் கேட்டிற்கு தப்பி, கிறிஸ்துவுக்குள் நிலைத்திருந்தால் உங்கள் வாழ்வு ஒரு நாளும் வீணாய் போகாது. நிச்சயமாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை எல்லாவிதமான நன்மையினாலும் நிறைத்து, உங்கள் வாழ்வை உறுதிப்படுத்துவார். நீங்கள் நிறைவான நன்மையினால் நிரப்பப்படுவீர்கள்.
0 comments:
Post a Comment