Bread of Life Church India

காணும் போதே மறைந்த தோட்டம்


சூரியன் உதித்து, படைப்புகள் எல்லாம் படைத்தவரை வணங்கி நின்ற அதிகாலை வேளையில், பறவைகளும் விலங்கினங்களும், சத்தம் எழுப்பி, கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தன.
அமைதியான அந்தச் சூழலில் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தாள் ஏவாள். பறவைகளும் விலங்குகளும் எழுப்பிய சத்தம் கேட்டு விடிந்து விட்டது என்று  எழுந்தாள். சிலு சிலு என்று வீசும் காற்று, நறுமணம் வீசும் மலர்கள், எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா விலங்குகளும் ஒன்றோடு ஒன்று மகிழ்ச்சியாக சுற்றிக்கொண்டிருப்பதைக் கண்டாள். இந்த சத்தங்களால் தொந்தரவுக்குள்ளாகாமல்,  நன்றாக அயர்ந்து உறங்கி கொண்டிருந்த ஆதாமை எழுப்பிவிட்டாள்.  அவர்கள் இருவரும் விலங்குகளோடும், பறவைகளோடும் விளையாடி விட்டு, காய்களையும் பழவகைகளையும் சாப்பிட்ட பின், வழக்கம் போல நிலத்தைப் பண்படுத்தும் தங்கள் வேலையில்  ஈடுபட ஆரம்பித்தனர்.
இதற்கிடையில் பகலின் குளிர்ச்சியான நேரத்தில் கடவுள் பரலோகத்திலிருந்து, இறங்கி ஏதேனுக்குள் வந்தார். ஆதாம், ஏவாள் இருவரும் மகிழ்ச்சியுடன் கடவுளை எதிர்கொண்டு அழைத்து, பழவகைகளை பறித்து சாப்பிட்டுக் கொண்டே. தோட்டத்தில் சந்தோஷமாக உலாவி வந்தார்கள். அநேக விஷயங்களை கடவுள் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்து, தன் உள்ளத்தில் உள்ளதை எல்லாம் வெளிப்படுத்தி பேசி மகிழ்ந்தார். தொடர்ந்து, கடவுள் ஆதாம் ஏவாளிடத்தில் “முன்பு தூதர்களாய் வானுலகில் இருந்த சிலர், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையில் உண்மையாக இல்லாமல், வானுலக கட்டுப்பாட்டை மீறி  கலகம் செய்ததால் வானுலகில் இருந்து துரத்தப்பட்டார்கள். துரத்தப்பட்ட அவர்கள் சாத்தான்களாய், நமது திட்டங்களுக்கு எதிராக எழும்பி இருக்கிறார்கள்.  உங்களுக்கும் அப்படிப்பட்டவர்கள் எதிரிகளாய் எழும்பி இருப்பதால், நீங்கள் மிகவும் ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும்" என்று சொல்லி, பிறகு அவர்களிடம், "இந்த ஏதேன் முழுவதும் உங்களுக்காக படைக்கப்பட்டதுதான். இதில் இருக்கும் எல்லா மரத்தின் பழங்களையும் நீங்கள் சாப்பிடலாம். நான் உங்களுக்கு விலக்கின மரத்தின் பழத்தை மட்டும் சாப்பிடக்கூடாது. அப்படி நீங்கள் சாப்பிட்டால் உங்களுக்கும் எனக்கும் உள்ள பந்தம் முறிக்கப்படும். அது உங்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும்’’என்று ஏற்கனவே சொன்ன தன்னுடைய வார்த்தைகளை நினைவுபடுத்தி,  “கவனமாக இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் வஞ்சிக்கப்பட்டு விடாதீர்கள்.’’ என்று ஆதாமிடம் அன்பான எச்சரிப்புடன் கடவுள் சொன்னார்.
“அந்த எதிரிகள் யார்? அவர்கள் எங்களுக்கு எதிராக ஏன் வருகிறார்கள். அவர்கள் கலகம் செய்தது எப்படி?’’ என்று ஆதாம் பதிலுக்கு கேள்வி எழுப்பினான்.
அதற்கு கடவுள், ஆரம்பம் முதல் சொல்ல ஆரம்பித்தார். ஆதாமும் ஏவாளும் பிரமிப்போடு அதைக் கவனமாக கேட்டார்கள். அப்படியே அந்த நாளின் பொழுது சென்றதும். கடவுள், “நாளை வருகிறேன்’’ என்று சொல்ல ஆதாமும், ஏவாளும், கடவுளுக்கு விடை கொடுத்து அனுப்பினார்கள்.
இப்படியாக ஒவ்வொரு நாளும் பகலின் குளிர்ச்சியான வேளையில் கடவுள் வருவது வாடிக்கையாக இருந்தது. ஆதாமும், ஏவாளும் ஒவ்வொரு நாளும் கடவுளின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். கடவுள் அவர்களுக்கு நிலத்தை பண்படுத்துவதைக் குறித்தும் பராமரிப்பதைக் குறித்தும் சொல்லி கொடுத்து, அவர்களோடு பேசி மகிழ்வார்.இப்படியாக ஒவ்வொரு நாளும் இன்பமாக கழிந்தது.
நாட்கள் கடந்தோடின. ஏதேன் தோட்டத்துக்குள் எப்படியும் நுழைந்து விட வேண்டும் என்று சாத்தான் பல நாட்களாய் முயற்சித்தான். ஆனால், கடவுளின் வேலி மற்றும் தூதர்களின் காவல் ஆகியவற்றைக் கடந்து அவனால் உள் நுழைய முடியவில்லை.  தோட்டத்துக்கு தண்ணீர் பாயும் படி, ஏதேனிலிருந்த பிரிந்த ஐபிராத்து நதிக்குள்ளாக விழுந்து, மூழ்கி மூச்சுப்பிடித்து நீந்திக்கொண்டே போய், ஏதேனுக்குள் போனவுடனே தண்ணீருக்குக்குள் இருந்து மேலே வந்து, அங்கு இருந்த விலங்குகளில் பாம்பு தந்திரம் நிறைந்ததாக இருப்பதை பார்த்து ஒரு பாம்பின் நட்பைப் பெற்று, அதோடு நட்பாக பழகினான். அதன் பின் ஒருநாள் அந்த பாம்பின் உடலுக்குள் சத்தமில்லாமல் புகுந்து, ஆதாம் ஏவாளை சந்திக்க சமயம் பார்த்துக் காத்துக்கொண்டிருந்தான்.
அப்பொழுது ஆதாமும் ஏவாளும் அன்றாட வேலை செய்யத் துவங்கும் வேளையில், ஏவாள் ஆதாமைப் பார்த்து, “நாம் இருவரும் ஒரே இடத்தில் நிற்பதால் எப்போதும் பேசி கொண்டிருப்பதுதான் அதிகமாக இருக்கிறது. வேலை எதுவும் நடக்கவில்லை. ஆகையால் இன்று நாம் தனித்தனியாக நம்முடைய வேலைகளை கவனிப்போம்’’. என்று சொல்ல, அதற்கு ஆதாம் பல ஆட்சேபணைகளைச் சொல்லி “அப்படி எல்லாம் வேண்டாம். ஒன்றாகவே வேலைகளை செய்யலாம்’’ என்று சொல்லியும் பிடிவாதமாக ஏவாள் கேட்காததால. அவளுடைய சொல்லுக்கு இணங்கி, தனித் தனியாக வேலை செய்யத் தொடங்கினர்.
இப்படி தனித் தனியாக அவர்கள் பிரிந்து சென்றதை பார்த்த சாத்தான். “இதுதான் சரியான சந்தர்ப்பம்; இதற்காகதான் காத்திருந்தேன்’’ என்று பாம்புக்கு உள்ளாக இருந்தவன் ஏவாளின் அருகில் வந்தான். அவளுடைய அழகையும், கடவுளின்  சாயலாக உள்ள ரூபத்தையும் புகழ்ந்து, அவர்கள் பேசியதைப்போலவே பேசி ஏவாளிடத்தில்  பேச்சை ஆரம்பித்தான். இதுவரை பேசாத பாம்பு எப்படி நம்மை போல் பேசுகிறது என்று ஏவாள் ஆச்சரியப்பட்டு, கொஞ்ச நேரம் திகைத்து நின்றாள். “இதுவரை பேச முடியாமல் இருந்த உனக்கு எப்படி பேசுகிற ஆற்றல் வந்தது’’ என்று வியந்து கேட்டாள்.. அதற்கு சாத்தான் “நான் இந்த தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் பழத்தை சாப்பிட்டேன். அன்று முதல் மற்ற விலங்குகளுக்கு இல்லாத புத்தி கூர்மையும், பேசும் ஆற்றலும் எனக்கு கிடைத்தது’’ என்று தந்திரமான தனது பொய் வார்த்தைகளை உதிர்க்க ஆரம்பித்தான். உடனே ஏவாள். அவனின் பொய் வார்த்தைகளை நம்பி“அப்படியா? அந்த மரம் எது? அது எந்த இடத்தில் இருக்கிறது அதை எனக்கு காண்பிக்க முடியுமா?" என்று பேதமையாய் கேட்டாள். தான் வந்த காரியம் இவ்வளவு சுலபமாக நடக்கிறதே என்று உள்ளத்துக்குள்ளாக மகிழ்ந்து கொண்டே, “இதோ இப்பவே அந்த மரத்தை காண்பிக்கிறேன். எனக்கு பின்னாக வா’’ என்று சொல்லி முனபாக செல்ல. சந்தோஷத்துடன் “இது வரை எனக்கு தெரியாததை இந்த பாம்பு காண்பிக்க போகிறது. போய் பார்த்து விட்டு, ஆதாமிடத்தில் சொல்ல வேண்டும் அவரும் சந்தோஷப்படுவார். அது எந்த மரமாக இருக்கும்.’’ என்று சிந்தித்துக்கொண்டே அதை பின் தொடர்ந்து சென்றாள்.
சிறிது தூரம் சென்றதும், “இதோ இருக்கிறதே இதுதான்’’ என்று பாம்பு காண்பித்தது. அதை பார்த்ததும் “இந்த மரமா?’’ என்று ஏவாள் அதிர்ச்சியை வெளி காட்ட “ஏன் உனக்கு இப்படி ஒரு அதிர்ச்சி. ஏற்கனவே உனக்கு இந்த மரத்தைக் குறித்து தெரியுமா?’’  என்று  ஒன்றும் தெரியாதது போல சாத்தான் கேட்டான். “இது கடவுள் விலக்கி வைத்த மரம். இந்த மரத்தின் பழத்தை நாங்கள் சாப்பிட கூடாது என்று கடவுள் சொல்லி இருக்கிறார்’’ என்று ஏவாள் வெகுளியாகச் சொன்னாள். உடனே பாம்புக்குள் இருந்த சாத்தான். நீங்கள் தோட்டத்தில் உள்ள எல்லா மரத்தின் பழங்களையும் சாப்பிடக்கூடாது என்று கடவுள் சொல்லி இருக்கிறாரா? என்று மறுபடியும் தந்திரமாக தனது பேச்சை தொடர்ந்தான். “இல்லை இல்லை நாங்கள் தோட்டத்தில் உள்ள எல்லா மரத்தின் பழங்களையும் சாப்பிடலாம். ஆனால் நாங்கள் சாகாமல், எப்போதும் கடவுளை விட்டு பிரியாமல் இருக்க தோட்டத்தின் நடுவில் உள்ள இந்த மரத்தின் பழத்தை மட்டும் தொடவோ, சாப்பிடவோ கூடாது என்று சொல்லி இருக்கிறார்." என்றாள்.
“கடவுள் தேவையில்லாமல் உங்களை பயமுறுத்தி வைத்திருக்கிறார். இந்தப் பழத்தை சாப்பிட்டால் சாவே இல்லை. என்னை பார் நான் செத்தா போய் விட்டேன். இந்தப் பழத்தை சாப்பிட்ட பிறகுதான் உன்னைப்போல என்னால் பேச முடிகிறது. நல்ல புத்தி கூர்மையுடன் செயல்பட முடிகிறது. நான் பெற்ற இன்பத்தை நீயும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் நீ கேட்டதும் சிரமம் பார்க்காமல் இந்த மரத்தை உக்குக் காண்பித்தேன். பார், இந்தப் பழம் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது. பார்க்கும் போதே சாப்பிட்ட உணர்வு வருகிறது . இதற்கு பிறகு உனது விருப்பம். விலங்காக இருந்த நான், இதைச் சாப்பிட்டு உன்னைப் போல பேசுவதை போல், நீயும் இதை சாப்பிட்டால், கடவுளைப்போல ஆகிவிடுவாய்." என்று பொய்க்கு மேல் பொய்யாக சொல்லி, தனது வஞ்சக வலையை விரிக்க, கொஞ்சம் கொஞ்சமாக ஏவாள் அதிலே சிக்க ஆரம்பித்தாள்.
கொஞ்சம் கொஞ்சமாக ஏவாளின் சிந்தை சிதற ஆரம்பித்தது. அவள் பார்க்க, பார்க்க விலக்கப்பட்ட மரத்தின் பழம் அதுவரை இல்லாத அளவுக்கு மிகுந்த பளபளப்புடன் பார்ப்பதற்கே இனிமையாக இருப்பது போல் காட்சி அளித்தது. “பார்க்கும் போதே இவ்வளவு அழகாகாக இருக்கிறதே, சாப்பிட்டால் எப்படி இருக்கும். ஐயோ! நினைக்கும் போதே எனக்கு இன்பமாக இருக்கிறதே, சாப்பிட்டால் எனது புத்தி தெளிந்து, கடவுளைப்போல ஆகி விடுவேன் என்று வேறு இந்தப் பாம்பு சொல்லுகிறது. சாப்பிட்டுத்தான் பார்க்கலாமா?’’ என்று சிந்தித்துக்கொண்டிருக்கும் போது, முழுவதுமாக சாத்தானின் வலையில் விழுந்தாள். உடனே கடும் ஆசை அவள் புத்தியை மயக்க, அந்த வேளையில் கடவுள் சொல்லிய வார்த்தைகள் மறக்க, விலக்கப்பட்ட மரத்தின் பழத்தைத் தானாக அவள் கை பறித்தது, அவள் உள் உணர்வில் “தவறு செய்கிறாய் இதை சாப்பிட வேண்டாம்’’ என்று எச்சரிப்பின் சத்தம் தொனித்தது. அவளோ அதை ஒரு பொருட்டாக எண்ணாமல், அலட்சிய படுத்தி சாப்பிட ஆரம்பித்தாள். கடவுளுக்கு எதிரான முதல் பாவம் மனுகுலத்துக்குள் நுழைந்தது. உடனே சாத்தான் வந்த வேலை இவ்வளவு சுலபமாக முடிந்ததை எண்ணி மனதுக்குள் தன்னை பாராட்டிக்கொண்டு, நைசாக அங்கு இருந்து நழுவ ஆரம்பித்தான்.
தூரத்தில் ஏவாளை தேடிக்கொண்டு வந்த ஆதாம். ஏவாள் விலக்கப்பட்ட மரத்தின் அருகில் நிற்பதை கண்டு, "ஏவாள் ஏவாள்" என்று கூப்பிட்டுக்கொண்டே, “இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்’’ என்று அருகில் வந்தான். சாத்தானின் வலையில் விழுந்து, புத்தி மயக்கத்தில், பாவத்தின் பிடியில் சிக்கி இருந்த ஏவாள் ஆதாமிடத்தில். “இந்தப் பழத்தை சாப்பிட்டதும் எவ்வளவு இன்பமாக இருக்கிறது. தெரியுமா?  இத்தனை நாட்கள் வீணாக போய் விட்டதே’’ என்று அவனுக்கும் கொடுத்தாள். “இந்த பழத்தை பறித்து ஏன் சாப்பிட்டாய். இது கடவுள் வேண்டாம் என்று சொன்ன மரம்’’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அவளுடைய புத்தி மயக்கத்திலும், பாவத்தின் அகோரத்திலும் அவனும் பிடிக்கப்பட்டவனாக என்ன செய்கிறோம் என்று அறியாமலேயே, ஏவாள் கொடுத்த பழத்தை வாங்கி சாப்பிட ஆரம்பித்தான். கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து இருக்க வேண்டியவர்கள். சாத்தானின் ஏமாற்று வார்த்தைக்கு கீழ்ப்படிந்ததால்,  மனுகுலத்தை குறித்து கடவுள் வைத்திருந்த திட்டம் உலகத்தின் முதல் மனிதர்களால் உடைந்தது.
சிறிது நேரத்திற்குள்ளாக அவர்களை மூடியிருந்த கடவுளின் சாயல் விலக ஆரம்பித்தது. அவர்களின் பாவக் கண்கள் திறக்கப்பட்டன. அவர்களின் உடல்கள் நடுங்கியது. அதுவரை தெளிவாக இருந்த மனம் பதற ஆரம்பித்தன. கடவுளின் சாயல் முழுமையாக விலகியதும். திகிலும் பயமும் அவர்களை பிடித்தது. அவர்களின் நிர்வாணம் கூச ஆரம்பித்தது. அப்பொழுதுதான் தெரிந்தது நாம் நன்றாக ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று, உடனே அங்கும் இங்கும் ஓடிச் சென்று அத்தியிலைகளைக் கோர்த்து, தங்கள் நிர்வாணத்தை மூடினார்கள். என்ன செய்கிறோம் என்று அறியாமல் அங்கேயே சுற்றி சுற்றி வந்தார்கள்.
எப்போதும் போல பகலின் குளிச்சியா வேளையிலே, ஆதாம் ஏவாளோடு தோட்டத்தில் உலாவும்படியாக கடவுள் வந்தார். கடவுள் ஏதேனுக்குள் வந்ததும் ஆவலோடு எதிரே வரும் ஆதாமும் ஏவாளும் அன்று வரவில்லை. நடந்த சூழ்நிலைகளை அறிந்த கடவுள். “ஆதாம், ஏவாள் என்று கூப்பிடார். ஏற்கனவே, பதறிக்கொண்டிருந்தவர்கள். கர்த்தருடைய சத்தத்தை கேட்டதும். கர்த்தருக்கு முன்பாக வராமல் பயந்து விலகி ஓடி, மரங்களுக்குள்ளாக தங்களை ஒளித்துக்கொண்டார்கள்.
மறுபடியும் கடவுள். “ஆதாம், ஆதாம்,’’ என்று கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கிறாய்’’ என்று கேட்டார். இரண்டு, மூன்று முறை கேட்ட பின் இனியும் மறைந்திருக்க முடியாது என்று அறிந்த ஆதாம் “தேவரீர் உம்முடைய சத்தத்தைத் தோட்டத்தில் கேட்டு, நான் நிர்வாணியாக இருப்பதால் பயந்து, ஒளித்துக்கொண்டேன்’’ என்றான். “உன்னை நிர்வாணியாக்கியது யார்? நீங்கள் சாப்பிடக் கூடாது என்று நான் விலக்கிய மரத்தின் பழங்களை சாப்பிட்டீர்களா? என்று அவர்களிடத்திலிருந்து  உண்மையை எதிர்பார்த்து கர்த்தர் கேட்டார். என்ன சொல்வது என்று திகைத்து நின்ற ஆதாம். தனது தப்பிதத்தை மறைக்க “தேவரீர் நீர் எனக்கு துணையாக கொடுத்த இந்த பெண்தான் எனக்குக் கொடுத்தாள், நானும் சாப்பிட்டேன்’’ என்று சொல்லி அவன் தப்பித்துக்கொள்ள ஏவாள் மீது பழி சுமத்தினான். அவனுக்குள் பாவம் வேலை செய்ய ஆரம்பித்தது
உடனே கர்த்தர் ஏவாளை பார்த்து: “நீ ஏன் இப்படிச் செய்தாய்? அது உங்களுக்கு விலக்கப்பட்ட மரம் என்று தெரியாதா? என்று கேட்டார். உடனே ஏவாள் கொஞ்சமும் தயங்காமல் “ நான் அங்கு நிற்கும் போது, பாம்புதான் பலவிதமான வார்த்தைகளை சொல்லி என்னை ஏமாற்றி விட்டது. என்று மழுப்பலாக பதில் சொன்னாள். தாங்கள் செய்த பாவத்தை ஏற்றுக்கொள்ள அவர்கள் இருவருக்கும் மனம் இடம் கொடுக்காதபடிக்கு அவர்களின் கீழ்ப்படியாமை தொடர ஆரம்பித்ததை கர்த்தர் அறிந்தார்.
அந்நேரத்தில் சாத்தானுக்கு துணையாக இருந்த பாம்பை பார்த்து கர்த்தர்: நீ இப்படிச் செய்ததால், இனி நீ மற்ற விலங்குகளைப் போல இல்லாமல் சபிக்கப்பட்டிருப்பாய். நீ உன் வயிற்றினால் நகர்ந்து நகர்ந்தே செல்வாய், உயிரோடு இருக்கும் நாள்கள் எல்லாம் மண்ணைத்தின்றே உயிர் வாழ்வாய். அதுதான் உனக்கு உணவாக இருக்கும். என்று சொல்லி விட்டு, இதற்கு முழுகாரணமாக இருந்த சாத்தானை பார்த்து, உனக்கும் பெண்ணிற்கும், உன் சந்ததிக்கும் அவள் சந்ததிக்கும் பகையை ஏற்படுத்துவேன்.  இவர்கள் சந்ததியில் வருகிறவர் உன்னை அழிப்பார். அப்பொழுது இந்த பாவ செயல்கள் எல்லாம் நீங்கும்’’ என்று சொல்லி.  சாத்தானுக்கு அப்பொழுதே நரக ஆக்கினை கொடுத்து, கர்த்தர் தீர்ப்பு வழங்கினார்.
     இதையெல்லாம் கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த ஆதாமும், ஏவாளும் இந்த விஷயம் இவ்வளவு பயங்கரமான விளைவை ஏற்படுத்தி விட்டதே என்று சிந்தித்துக்கொண்டிருந்தனர். கர்த்தர் ஏவாளைப்பார்த்து, நீ கர்ப்பவதியாக இருக்கும் போது உனக்கு வேதனையை அதிகமாகமாக்குவேன். கஷ்டத்துடனே பிள்ளையை பெற்று எடுப்பாய். உன் ஆசை எல்லாம் உன் கணவனை சுற்றியே இருக்கும். இனி அவன்தான் உன்னை ஆளுகை செய்வான் என்றார். ஏவாள் செய்வது அறியாது திகைத்து நின்றாள்.
ஆதாமிடத்தில் “நீ உன் மனைவியின் வார்த்தையை கேட்டு, சாப்பிட வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின மரத்தின் பழத்தை நீ சாப்பிட்டபடியினால், பூமி உன்னாலே சபிக்கப்பட்டிருக்கும், இனி வாழ்நாளெல்லாம் கஷ்டத்துடனே பாவம் தரும் பலன்களை பெற்றுக்கொள்வாய். அதனால் நிலத்தில் நீ கஷ்டப்பட்டு உழைத்தாலும் முழு பலன்களையும் பெற்றுக்கொள்ள மாட்டாய்.  இனி நிலம் உனக்கு முட்களையும் களைகளையுமே அதிகமாக கொடுக்கும்.
நீ பூமியில் இருந்து உருவாக்கப்பட்டபடியால், நீ மண்ணாய் இருக்கிறாய் மரித்து மண்ணுக்குத் திரும்புவாய். அதுவரை கஷ்டத்துடன் வியர்வை சிந்தி வேலை செய்துதான் உணவை உண்பாய்.’’ என்று சொன்னார்.
“ஆதாம் கடவுளையே பார்த்து நடுங்கி கொண்டிருந்தான். இத்தனை நாட்கள் அன்பாக நம்மோடு நடந்து வந்த கடவுளா? இத்தனை கோபமாக பேசுகிறார். இதுவரை கடவுளை ஒருநாள் கூட இப்படி பார்த்ததில்லை. தனது முட்டாள்தனமான செயலால் கடவுளுக்கு கோபத்தை ஏற்படுத்தி விட்டோமே என்று நினைத்து தலை கவிழ்ந்து நின்றான்.
அப்பொழுது கடவுள் ஒரு மிருகத்தை அடித்து தோலை உரித்து இருவருக்கும் தோலினால் உடைகளை உண்டாக்கி, “இதை அணிந்து கொள்ளுங்கள்’’ என்று அவர்களுக்கு கொடுத்தார்.
பின்பு அவர்களை “மண்ணை பண்படுத்துங்கள்’’ என்று சொல்லி ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே அனுப்பி விட்டார்.  வாழ்நாள் எல்லாம் சாகாமல் இருக்க செய்யும் மரத்தின் பழங்களை  மனிதர்களில்  ஒருவரும் இனி சாப்பிட்டு விடக்கூடாது என்று ஏதேன் தோட்டத்திற்கு கேருபீன்களையும், ஒளிவீசும் பட்டயத்தையும் காவல் வைத்தார்.
ஏதேன் தோட்டத்தில் இருந்து தேவனால் வெளியேற்றப்பட்ட ஆதாமும் ஏவாளும் வெளியில் வரும் பொழுது கடவுளை பார்க்க முடியாத படிக்கு அவர்கள் கண்களை விட்டு கடவுளுடைய சாயல் மறைந்து போக ஆரம்பித்தது, இருவரும் திரும்பிப் பார்த்தபடியே நடக்க, அவர்கள் கண்ணை விட்டு ஏதேன் தோட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது. அதுவரை செழிப்பான பசுமையான ஏதேனில் இருந்தவர்களுக்கு இப்போது பார்க்கிற பூமி புதுமையாக தெரிந்தது. எல்லாம் வறட்சியாக காணப்பட்டது. கண்கள் கலங்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க, கடவுளின் சாயலும், ஏதேனும் முழுமையாக அவர்கள் கண்ணை விட்டு அகன்று, மறைந்து போனது. 


ஆதியாகமம்  3 ம் அதிகாரத்தில் இருந்து........கதை வடிவில்

0 comments:

Post a Comment