Bread of Life Church India

மதிக்கப்படுவாய்


``நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன்'' என்று கர்த்தர் சொல்லுகிறார் (செப்பனியா 3:20).
                 சிறுமைப்பட்டு, அவமானப்பட்டு, நிந்திக்கப்பட்டு, வேதனையோடு வாழ்ந்து வந்த நம்முடைய வாழ்க்கையில் இதுமுதல் நம்மை புகழ்ச்சியாக்கி, எந்த இடங்களில் எந்த பகுதியில் நிந்திக்கப்பட்டு, சிறுமை அனுபவித்தோமோ, அதே பகுதியில் கர்த்தர் நம்மை உயர்த்தி மேன்மையாக வைக்கப்போகிறார்.
                 தேவன் கொடுத்துள்ள இந்த வாக்குத்தத்தத்தை பிடித்து, உண்மையாக தேவ சமூகத்தில் ஜெபித்து சுதந்தரித்துக் கொள்வோம்.
                ``தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும் (சங் 90:15) என்று மோசே ஜெபித்தது போல நம்முடைய வாழ்விலும், தேவனாகிய கர்த்தர் புகழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் தரும்படியாக, அவருடைய பாதத்தை பிடித்து ஜெபிப்போம்,
நம்முடைய கையின் கிரியைகளை ஆசீர்வதித்து, நம்முடைய பிரயாசத்தின் பலனை நாம் பெற்றுக்கொள்ளும்படியாகவும், நாம் செய்கிறவைகளை வாய்க்கச் செய்து கனமுள்ள பாத்திரமாக கர்த்தர் வழிநடத்துவார்.
நிந்தைக்கு பதில் கனம்
                ``நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம் பெற்றாய்''(ஏசாயா43:4) தேவனுடைய பார்வைக்கு செம்மையான வைகளையும், நலமானதையும், செய்யும்பொழுது தேவன் மகிழ்ச்சியடைவார், அவருடைய பார்வையில் நாம் அருமையானவர்களாக இருப்போம், அப்பொழுது நம்முடைய வாழ்வில் கனம் பெற்றவர்களாக வாழ்வோம்.
                தேவனுடைய வார்த்தைக்கு உண்மையாக கீழ்ப்படிந்து, தேவனுடைய வார்த்தையின் படியாக நடக்கும் பொழுது, நம்முடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்களால் கனப்படுத்தப்படும்.
                இதுநாள்வரை நம்முடைய வார்த்தைகளை உதாசீனப்படுத்தி, நம்மை ஏளனமாய் பார்த்தவர்களுக்கு முன்பாக, கர்த்தரோ நம்மை கனப்படுத்தி உயர்த்தும்பொழுது, அதை மற்றவர்கள் கண்கள் கண்டு வியப்படையும், கர்த்தர் ஒருமனிதனை உயர்த்த வேண்டும், கனப்படுத்த வேண்டும், சகல விதத்திலும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று சித்தம் வைத்திருப்பாரானால், அதைத்தடுத்து நிந்திக்கவும், அவமானப்படுத்தவும் முற்படுபவன் யார்?
                எனவே எனக்கு அன்பானவர்களே: உங்கள் வாழ்க்கையில் கர்த்தர்  உங்களை மேன்மைப்படுத்தி, கனப்படுத்தி உயர்த்தும்படியாக சித்தம் வைத்து விட்டார். இனி உங்கள் வாழ்வில் கனவீனமும், நிந்தைகளும் அவமானங்களும் இல்லை. இல்லவே இல்லை, இதை கர்த்தர் உங்களுக்கு உறுதியாக சொல்லுகிறார்.
                இதை நீங்கள்  விசுவாசிக்கிறீர்களா? இந்த வார்த்தைகளை கர்த்தரே என்னிடம் பேசுகிறார் என்ற தெளிவோடு, உண்மையாக உணர்ந்து, இந்த வார்த்தைகளை நீங்கள் உங்களுக்காக எடுத்துக் கொள்வீர்களானால், நிச்சயமாக உங்கள் வாழ்வில் இது முதல் கனத்தையும், மேன்மையையும், உயர்வையும், நீங்கள்  பெற்றுக்கொள்வது நிச்சயம்.
                ஒரு வேளை இவைகளை ``ஆமா'' இத்தனை நாட்களாக இல்லாததா இனிமேல் என் வாழ்வில் வந்து விடப்போகிறது, நடப்பது நடக்கட்டும் என்று விரக்தியோடு இவைகளை நீங்கள் விசுவாசிக்காமல் விட்டு விடுவீர்களானால் , உங்களுடைய வாழ்வில் நீங்கள் தொடர்ந்து விரக்தியோடுதான் இருக்க வேண்டும்.
                வேலை செய்யும் இடத்தில் நீங்கள் கனவீனப்பட்டுக் கொண்டிருக்கலாம். உங்கள் குடும்பத்தில் நீங்கள் தொடர்ந்து கனவீனப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கலாம் திருமணம் தடைபட்டு அதினிமித்தமாக மற்றவர்களால் கனவீனப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கலாம், குழந்தை பாக்கியம் இல்லாததால் நீங்கள் மற்றவர்களால் கனவீனப்பட்டுக்கொண்டிருக்கலாம், ஆனால் கர்த்தர் உங்களுக்கு சொல்லுகிறவைகள் என்னவென்றால் இதுவரைக்கும் உங்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த எல்லாவிதமான கனவீனங்களும் உங்களை விட்டு நீங்கி நீங்கள் கனமுள்ள பாத்திரமாக இருப்பீர்கள். இது வரை உங்கள் வாழ்வில் இருந்த எல்லா தடைகளும் இது முதல் நீக்கப்பட்டு, நான் உங்களுக்கென்று வைத்திருக்கும், ஆசீர்வாதங்களை நீங்கள் சுதந்தரித்துக் கொள்வீர்கள். உங்கள் பயமும், உங்கள் ஏமாற்றமும், உங்கள் கலக்கமும் நீக்கப்பட்டு, நீங்கள் ஒரு புதிய நபராக புதிய நன்மைகளையும், ஆசீர்வாதங் களையும் பெற்றுக்கொண்டு, உங்களை உதாசீனப்படுத்தினவர்களும் உங்களிடத்தில் வந்து, உங்கள் மூலமாக உதவி பெற்றுக்கொள்ளும் படியாக செய்வேன் என்று இந்த நாளிலே உங்களைப் பார்த்து கர்த்தர் சொல்லுகிறார். எனவே கனம் பெற்ற உங்கள் வாழ்வு, ஜெயமுள்ளதாக மாறும்.
அன்பு சகோதரனே, சகோதரியே! கர்த்தரே உங்களுக்காக சொல்லும் இந்த வார்த்தைகளை விசுவாசித்து ஜெபியுங்கள்,
நிந்தைக்கு பதில் புகழ்ச்சி
``உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்திரம் அடைவார்கள். நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும்'' (ஏசாயா 61:7).
எங்கெல்லாம் வெட்கமும், இலச்சையும் உண்டானதோ, அங்கெல்லாம் நற்பலனும்,சந்தோஷமும் உண்டாகும், வெட்கப்பட்டவன் தொடர்ந்து வெட்கப்படவேண்டும் என்பதோ, சிறுமைப்பட்டவன் தொடர்ந்து சிறுமைப்படவேண்டும் என்பதோ, தள்ளப்பட்டவன் தொடர்ந்து தள்ளப்படவேண்டும் என்பதோ, தேவனுடைய நியதி அல்ல, வேதம் சொல்லுகிறது ``அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்'' (1 சாமு 2:8).
``துயரப்பட்டவர்களைச் சீர்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும் ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கிறார்' (ஏசாயா 61:3).
உலக மக்களின் பார்வையில் வேண்டுமானால், தள்ளப் பட்டவனையும், ஒடுக்கப்பட்ட வனையும், சிறுமைப்பட்டவனையும் அப்படியே வைத்திருக்க வேண்டும், அப்படிப்பட்டவர்கள் எந்த விதத்திலும் உயர்ந்து விடக்கூடாது என்று ஒடுக்கிவைத்திருப்பார்கள். ஆனால் தேவனோ அப்படிப்பட்டவர்களை உயர்த்தி உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து அலங்கரிக்க விரும்புகிறார்.
                எனவே எனக்கன்பானவர்களே: உங்கள் எண்ணத்தில் இருக்கும் அடிமைத்தனத்தை தூக்கி எரியுங்கள், விதியென்ற போர்வையில் விடியலை அறியாது, நீங்கள் உறங்கிக் கொண்டிருந்த்து போதும். உங்களைத் தேடி இயேசு கிறிஸ்து என்னும் விடியல் வந்து, உங்களை பிரகாசிக்க உங்கள் மனக்கதவை தட்டிக் கொண்டிருக்கிறார்.
துரிதமாக எழுந்திருங்கள், எழுவது நீங்கள் மட்டுமல்ல, வீழ்ந்த உங்கள் வாழ்வுந்தான். போதும் அறியாமை கண் மயக்கத்தில், காலமெல்லாம் அடிமைப்பட்டு, விதியென்னும் கை விலங்கிட்டு, தரித்திரமென்னும் சிறையில் உங்களை பிசாசு அடைத்து வைத்திருக்கும் செயலை அறிந்து, சுவிசேஷமென்னும் வெளிச்சத்தில் விழித்தெழுந்து, வசனமென்னும் சம்மட்டியால், உங்கள் கை விலங்கை உடைத்து, இயேசு கிறிஸ்தென்னும் அன்பு சிறைக்குள் வாருங்கள், உங்கள் வாழ்வு ஒளிரும் உங்கள் குடும்பம் செழிக்கும்,தேசத்தில் நீங்களும் உயர்வீர்கள். அநேகருக்கு ஆசீர்வாதமாக இருப்பீர்கள்.
எழும்புங்கள்! இன்று முதல்  நீங்கள் பிரகாசிக்கும் விளக்காவீர்கள் உங்கள் வெளிச்சத்தில் நடக்க ராஜாக்களும், அதிபதிகளும் விரும்புவார்கள். வீணாய் போனவனென்று உங்களை வினவின சத்தங்கேட்டு, உண்மையாகவே நான் வீணாய் போனவனோ என்று ஒரு கனம் உங்களுக்குள்ளாய் வந்து போன எண்ணம் உங்களை வீணாய்ப் போனவனாகவே மாற்றிவிட்டதோ? நீங்கள் வீணாய் போனவனல்ல, நீங்கள் வீரூண்டு எழும்பக் கூடியவரென்று உங்களைப்பார்த்து, உங்களைப் படைத்து, உருவாக்கி, உங்களைப் பயன்படுத்த துடிக்கும் அன்பர் இயேசுவின் சத்தத்தை உங்கள் செவிகள் இன்று கேட்கட்டும். இந்த நாள் முதல் சகதியில் கிடந்த உங்கள் வாழ்வு சந்தனமாகும் உங்கள் துக்கம் மாறும், உங்கள் வெட்கம் மாறும், இலட்சை மாறும்,உங்களுக்குள் நீங்கள் நல் மனிதனாவீர்கள், வேதத்தின் வழியில் நடந்து, நல் வழிகாட்டியாவீர்கள், இயேசுவுக்கு சீடனாவீர்கள், தேசத்தில் நீங்கள் தலைவனாவீர்கள், வெறுத்தவர் உங்களை தேடி வருவர், வேண்டாம் என்றவர் உங்களுக்காய் காத்து நிற்பர். கலங்கி நின்ற உங்கள் மனது களிப்பாகும், முடிந்ததென்று நினைத்த புகழ் ஓங்கிவளரும். எல்லாம் இயேசுவால் ஆகும், மறந்து விடாதீர்கள்,  சுரக்கும் நீருற்றை (இயேசுவை) விட்டு விடாதீர்கள், வளர்ச்சியடையுங்கள், உயர செல்லுங்கள், எல்லாவற்றிக்கும் காரணமானவரை உயர்த்திப் பிடியுங்கள், உயர உயர செல்லுவீர்கள் உயரத்திற்கு அளவில்லை அணையில்லை, இது உனக்கு துவக்கம் நல்லபடியாக ஓடுங்கள் உங்கள் வளற்சிக்கு இனி முடிவே இல்லை.       

2 comments:

  1. Arumayana katturai. Dhevan ungalukku Vethagama adippadayil aaruthal koorum thalanthai thanthulkar. Thodarnthu anegarukku aaseervaathamaga payanpaduthuvaraga. http://www.mimidani.blogspot.in

    ReplyDelete
  2. வந்து உற்சாகப் படுத்தி கருத்திட்டமைக்கு நன்றி சகோதரரே,

    ReplyDelete