வந்த இடம் நல்ல இடம்
எருசலேமிலிருந்து இரண்டு
மைல் தூரமான ஒலிவ மலைச்சரிவிலிருந்த பெத்தானியாவை நோக்கி மக்கள் குதிரை
வண்டிகளிலும், நடந்தும், கூட்டம் கூட்டமாய் சென்று கொண்டிருந்தனர். வியாதியோடு
இருந்தவர்களையும் கூட சிலர் சுமந்து கொண்டும், வண்டியில் ஏற்றிக்கொண்டும் வேக
வேகமாக சென்று கொண்டிருந்தனர்.
சென்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து
“என்ன பெத்தானியாவை நோக்கி ஏன் இவ்வளவு மக்கள் கூட்டம் சென்று கொண்டிருக்கிறது,
என்னப்பா எதாவது விசேஷமா?’’ என்று ஒருவர் கேட்டார். “ஓ அதுவா அந்த நசரேயனான இயேசு பெத்தானியா
வந்திருக்கிறார். அவரை பார்க்கத்தான் இந்த கூட்டம் எல்லாம் போகிறது’ என்று மற்றவர் பதில் சொன்னார்.
“அவரிடம் அப்படி என்ன விசேஷம்
இருக்கிறது’’ என்று வியப்போடு கேட்டார். “அவருடைய போதனைகள் எல்லாம்
இதுவரை ஒருவரும் சொல்லாத போதனைகளாக இருக்கிறது என்றும், அவர் அநேக அற்புதங்களை
செய்கிறார் என்றும் அவரைக்காண இந்த மக்கள் எல்லாம் இப்படி ஓடுகிறார்கள்’’ என்றார். “அப்படியா! வா நாமும் போய்தான் பார்க்கலாமே’’ என்று சொல்ல அவர்களும் அந்த மக்கள்
கூட்டத்துடன் கலந்தார்கள்.
இயேசு கிறிஸ்து பெத்தானியாவில்
இருந்தார். அவருடைய சீடர்களும் அவர் அருகில் இருந்தனர். சீமோன் என்ற பரிசேயன் இயேசு கிறிஸ்துவிடம்
வந்து, “போதகரே தயவு செய்து நீங்கள் இன்று எனது வீட்டிற்கு வந்து உணவு சாப்பிட வேண்டும்’’ என்று மிகவும் வருந்தி கேட்டான். இயேசு கிறிஸ்துவும்
“வருகிறேன்’’ என்று சொன்னார். இயேசு கிறிஸ்து வருகிறேன் என்று சொன்னதும் அவன் மிகுந்த
மகிழ்ச்சியோடு உணவு ஆயத்தப்படுத்துவதற்காக சென்றான். போகும் போதே “இயேசு என்னுடைய
வீட்டில்தான் இன்று தங்க போகிறார் என்று பார்க்கிற எல்லோரிடமும் சொல்லி தனது
மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். சிறிது
நேரம் சென்ற பின் அவனுடைய வீட்டிற்கு இயேசு கிறிஸ்து சென்றார்.
அவர் வீட்டின் உள்ளே நுழையும்
போதே, அவரை காணவும் அவருடன் அமர்ந்து சாப்பிடவும் வேண்டும் என்று தங்களை
முக்கியஸ்தர்களாக காண்பித்துக்கொண்டிருக்கும் அந்த ஊரில் உள்ளவர்கள், அவருக்கு
முன்பாக வந்து அமர்ந்திருந்தனர். அந்த வீடு முழுவதும் மக்கள் கூட்டத்தால்
நிறைந்திருந்தது. இயேசு கிறிஸ்து தனது இருக்கையில் அமர்ந்தார்.
அப்பொழுது அந்த ஊரில்
இருந்த பெண் ஒருவர் இயேசு கிறிஸ்து சீமோன் வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்ததும்
விலை உயர்ந்த பரிமளதைலத்தை எடுத்துக்கொண்டு, வேக வேகமாக சீமோன் வீட்டை நோக்கி
நடந்தாள். வீட்டை நெருங்கிய போது வீட்டிற்குள் செல்லமுடியாத அளவுக்கு மக்கள்
கூட்டம் நிறைந்திருப்பதை கண்டாள். இருந்தாலும் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல்
கூட்டத்தை விலக்கி வாசல் அருகே சென்றாள். அந்த பெண்ணை பார்த்ததும் எல்லாரும் முகம்
சுழிக்க ஆரம்பித்தனர்.
“இவள் ஏன் இங்கு வருகிறாள், கொஞ்சம் கூட
வெட்கம் இல்லாமல் இவள் எல்லாம் எப்படித்தான் உயிர் வாழ்கிறாளோ?’’ என்று ஒருவர்
முணு முணுக்க அருகில் இருந்தவர் ”ஆமா ஆமா இப்படிப்பட்ட நபர்களை எல்லாம் சும்மா விடக்கூடாது’’ என்று ஆவேசம்
கொள்ள “இங்கு எதற்கு வந்தாள்’’ என்று அவள் கேட்கும் படியாகவே அவர்கள் பேசிக்கொண்டார்கள். அவர்கள்
பேசுவதையும் பொருட்படுத்தாத படிக்கு நேராக வீட்டிற்குள்ளாகவே சென்று விட்டாள்.
இயேசு கிறிஸ்து
அமர்ந்திருப்பதால் எதுவும் பிரச்சனை வேண்டாம் என்று யாரும் எதுவும் கேட்க வில்லை. ஆனாலும்
கூட்டத்திற்குள் அமைதியான சல சலப்பு இருந்தது. இயேசு கிறிஸ்து பந்தியில்
அமர்ந்திருந்தார். அந்த பெண் நேராக இயேசு
கிறிஸ்துவின் அருகில் சென்று, அவருக்கு பின்பாக நின்று, அழுது கொண்டிருந்தாள். அவர்
எதையும் கவனிக்காதவர் போல் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் சென்ற பின், அருகில்
அமர்ந்து அவர் பாதத்தை பிடித்து அழுது கொண்டே இருந்தாள். அவளுடைய எண்ணங்களில்
கடந்த நாட்களில் நடந்த நினைவுகள் முன்பாக வந்தது. “எவ்வளவு அருவருப்பான வாழ்க்கை’’ அவளை நினைக்க
அவளுக்கே மிகவும் வெறுப்பாக இருந்தது. தன் மனம் போனபாதையில் போய்கொண்டிருந்த
அவளுடைய வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை ஒருநாள் கேட்டாள். அவர்
பேசினவார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளுடைய மனதில் ஆணி அடித்தார் போல் பதிந்திருந்தன.
அவள் எதை செய்தாலும் அவருடைய வார்த்தைகள் அவளை பின்தொடர்வதை உணர்ந்தாள். தான்
செய்கிற எல்லாவற்றையும் நியாயப்படுத்திக்கொண்டிருந்தவள், அவருடைய வார்த்தைக்கு
முன்பாக தன்னை நியாயப்படுத்த முடியவில்லை. அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் “நீ
தவறான வழியிலே செல்கிறாய். நீ பாவமான வாழ்க்கை வாழ்கிறாய்’’ என்று அவளை கடிந்து
கொள்வதாக உணர்ந்தாள்.
“என்ன செய்வது?
யாரிடத்தில் சொல்வது ஒன்றும் புரியவில்லை. நான் செய்வது தவறுதான், என்னுடைய
வாழ்க்கையே பாவத்தில் தான் நிறைந்திருக்கிறது. அது எனக்கே நன்றாக தெரிகிறது.
ஆனாலும் என்னால் இதில் இருந்து விடுபட முடிய வில்லையே. நான் என்ன செய்வேன்’’ என்று தினந்தோறும்
தனிமையிலே அழுவாள். கதறுவாள். பல சமயம் இயேசு கிறிஸ்துவை தேடிப் போய் தன்னுடைய
நிலையை சொல்லி அழவேண்டும் என்று நினைப்பாள். ஆனால் அந்த எண்ணம் மனதுக்குள்
வந்ததும் அடுத்து அவள் மனம் சொல்லும் “அந்த பரிசுத்தவானிடம் செல்ல உனக்கு என்ன
அருகதை இருக்கிறது. முழுவதும் பாவத்தால் நிறைந்திருக்கும் நீ அவருக்கு முன்பாக
எப்படி நிற்பாய்? உன்னை பார்க்கிறவர்கள் உன்னை கல்லால் அடிக்க மாட்டார்களா?’’ உடனடியாக அவளுடைய
எண்ணத்தை கை விட்டு விடுவாள். இப்படியாகவே பல நாட்கள் சென்று விட்டது. இப்பொழுது
தன்னுடைய ஊருக்கே இயேசு கிறிஸ்து வந்திருக்கிறார் என்பதை அறிந்ததும், எவ்வளவு
கட்டுப்படுத்தியும் அவளால் முடியவில்லை. “என்ன ஆனாலும் பரவாயில்லை இன்றைக்கு இயேசு
கிறிஸ்துவை நேரில் சந்தித்தாக வேண்டும். அவரிடம் பேசாவிட்டாலும் பரவாயில்லை.
அவருடைய பாதத்தை பிடித்து அழுது என்னுடைய பாவத்தை எல்லாம் சொல்லி மன்னிப்பு
கேட்டு, நான் மனந்திரும்பியே ஆகவேண்டும். இந்த ஊர் என்ன பேசினாலும் பரவாயில்லை.
கல்லால் அடித்தால் சாகிறேன். என்னுடைய பாவ வாழ்க்கையில் இருந்து எனக்கு விடுதலை
வேண்டும்’’ என்ற தீர்மானத்துடன் வந்தவள்தான் இப்படி கண்ணீர் விட்டு
அழுது கொண்டிருக்கிறாள். அவள் வடித்த கண்ணீர் அவருடைய பாதத்தை நனைக்க ஆரம்பித்தது.
அப்பொழுது தனது தலை முடியால் அவருடைய பாதத்தை துடைக்க ஆரம்பித்தாள்.
இதை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்தவர்கள்
அவளை குறித்தும் அவள் வாழ்க்கையைக்குறித்தும் அறிந்திருந்ததால் அவளைப்பார்க்கும்
போதே அருவருப்பாக எண்ணி, அவளையும் பார்த்தார்கள், இயேசு கிறிஸ்துவையும்
பார்த்தார்கள். இயேசுவோ எதையும் கவனிக்காதவர் போல உணவு அருந்திக்கொண்டிருந்தார். அவளும்
சுற்றி இருக்கும் மக்களையோ, இயேசு கிறிஸ்து தன்னை கவனிக்கிறாரா இல்லையா? என்பதை
எல்லாம் பார்க்காதபடிக்கு தான் வந்த வேலையில் முழுகவனத்துடன் இருந்தாள். தலை
முடியால் பாதத்தை துடைத்த பின், அவருடைய பாதத்தை முத்தம் செய்து, தான் கொண்டு வந்த
பரிமள தைலத்தை அவருடைய பாதத்தில் ஊற்றி பூசினாள்.
அப்பொழுது கூடியிருந்த
மக்கள் கூட்டத்தில் சிலர் அதிர்ச்சி அடைந்து “இந்த தைலம் எவ்வளவு விலை உயர்ந்தது,
இதை விற்றால் எவ்வளவு பணம் கிடைக்கும்’’ என்று சொல்லி கணக்கு
போட்டுக்கொண்டிருந்தனர்.
“இந்த தைலத்தை விற்றால் அதிகமான பணம் கிடைக்கும்.
அந்த பணத்தை இல்லாதவர்களுக்கு கொடுக்கலாமே’’ என்று சிலர் பேசிக்கொண்டனர்.
எதையும்
கவனிக்காமல் அந்த பெண் இயேசுவின் பாதத்தில் தைலத்தை பூசிக்கொண்டிருந்தாள்..அந்த
வீடு முழுவதும் பரிமள தைல வாசனையால் நிறைந்தது. அதுவரை தனது கோபத்தின் குமுறலை
வெளிக்காட்டாமல் இருந்த சீமோன் பொறுமை இழந்தவனாக “இவர் தீர்க்கதரிசியாயிருந்தால்
தம்மை தொடுகிற பெண் யார் என்றும், எப்படிப்பட்டவள் என்றும் அறிந்திருப்பார். இவளைப்
பிடித்து வெளியே தள்ளிவிடாமல் அவருடைய பாதத்தை பிடித்துக்கொண்டிருக்கிறாள். அவர்
எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறாரே! இவள்
எப்படிப்பட்ட பாவியான பெண் என்பது எனக்கு தெரியும். இந்த விருந்து
கெட்டுவிடக்கூடாது என்று பார்க்கிறேன் இல்லை என்றால் நானே இவளை கழுத்தை பிடித்து
வெளியே தள்ளிவிட்டிருப்பேன்’’ என்று தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டான். ஆனாலும்
வெளிப்படையாக பேச தயங்கினான்.
எல்லாவற்றையும்
ஆரம்பம் முதல் கவனித்திருந்து கவனிக்காதவர் போல இருந்த இயேசு பேச ஆரம்பித்தார்.
“சீமோன் நான் உன்னிடத்தில் ஒன்று கேட்க வேண்டும்’’ என்றார். உடனே
சீமோன் “சொல்லுங்கள் போதகரே’’ என்றான். ஆனாலும் “நாம் பேசியது இவருடைய காதில்
கேட்டிருக்குமோ?’’ என்று உள்ளத்துக்குள்ளாக பயந்தான். அங்கே இருந்த எல்லாருடைய
பார்வையும் இயேசு கிறிஸ்துவையே நோக்கி இருந்தது. அந்த பெண்ணோ எதையும்
கவனிக்காதவளாய் தான் வந்த வேலையில் மிகுந்த கவனத்தோடு அவருடைய பாதத்தில் கண்ணீரோடே பரிமள தைலத்தை
பூசிக்கொண்டிருந்தாள்.
அப்பொழுது இயேசு
கிறிஸ்து, சீமோனிடத்தில் “ செல்வந்தனான ஒரு மனிதனிடத்தில் இரண்டு நபர்கள் கடன்
வாங்கி இருந்தார்கள். ஒருவன் ஐநூறு வெள்ளி காசும், இன்னொருவன் ஐம்பது வெள்ளி
காசும் திருப்பி கொடுக்க வேண்டும். கொடுக்க வேண்டிய நாளும் வந்து விட்டது. ஆனால்
இருவரும் கொடுக்கக் கூடிய சூழ்நிலையில் இல்லை. அப்பொழுது இந்த இரண்டு நபர்களின் சூழ்நிலையை
அறிந்து கடன் கொடுத்திருந்த செல்வந்தர் இருவரையும் அழைத்து என்னிடத்தில்
வாங்கியிருந்த கடனை கொடுக்க வேண்டிய நாள் வந்து விட்டது, ஆனாலும் உங்களால் கொடுக்க
முடியவில்லை. உங்களின் நிலைமையை நான் அறிந்திருக்கிறேன். ஆகையால் உங்கள் கடன்களை
நான் மன்னித்து விட்டேன். நீங்கள் இருவரும் எனக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்க வேண்டாம்
என்று சொன்னார். இப்பொழுது நீ சொல். அந்த இரண்டு நபர்களில் யார் அதிகமாக அந்த செல்வந்தரிடம்
அன்பாக இருந்திருப்பார்கள்?’’ என்று கேட்டார்.
இயேசு கிறிஸ்து
எதற்காக இப்படி கேட்கிறார் என்பதை யூகித்த சீமோன், “ எவனுக்கு அதிகமாக மன்னித்து
விட்டாரோ, அவன்தான் அதிக அன்பாய் இருப்பான் என்று நினைக்கிறேன்’’ என்று
தயக்கத்துடன் பதில் சொன்னான். “மிகவும் சரியாக நிதானித்து பதில் சொன்னாய்’’ என்று
சொல்லிவிட்டு தன் அருகில் இருந்த பெண்ணை பார்த்து, சீமோனை நோக்கி, நான் உன்
வீட்டிற்குள்ளாக வரும் பொழுது, நீ என் கால்களை தண்ணீரினால் கழுவவில்லை. இந்த பெண் உள்ளே வந்தது முதல் தனது கண்ணீரினால்
என்கால்களை கழுவி, தனது தலை முடியினால் துடைத்து விட்டாள். நீ என்னை முத்தம் செய்ய
வில்லை. இவள் எனது கால்களை ஓயாமல் முத்தம் செய்து கொண்டிருக்கிறாள். நீ என்
தலையில் எண்ணெய் பூசவில்லை இவள் என் பாதங்களில் பரிமள தைலம் பூசினாள்.
ஆதலால் உனக்கு
சொல்லுகிறேன், இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது: ஆகையால் என்னில் அன்பு
கூர்ந்து, தன்னுடைய அன்பை இவ்விதமாக வெளிப்படுத்துகிறாள். எவனுக்கு கொஞ்சமாக
மன்னிக்கப்பட்டதோ அவன் கொஞ்சமாக அன்பு கூருவான்’’ என்று சொல்லி
அந்த பெண்ணை பார்த்து “மகளே நீ உன் பாவத்திற்காக மனம் வருந்தி உன்பாவத்திலிருந்து
விடுதலை அடைய வேண்டும் என்று கண்ணீரோடு நீ வந்ததால் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது’’. என்றார்.
அவர்பேச பேச அவரை
சுற்றி இருந்தவர்களும் சீமோனும் கவனமாக அதைக்கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த
பெண்ணும் இயேசுகிறிஸ்து தனது பாவங்களை மன்னித்து தன்னை ஏற்றுக்கொண்டார் என்றதும்
முன்பை விட இன்னும் அதிகமாக அழுதாள். ஆனால் அது ஆனந்த கண்ணீராய் வடிந்து
கொண்டிருந்தது.
அப்பொழுது இயேசு
கிறிஸ்துவோடு கூட பந்தி இருந்தவர்களில் சிலர், “பாவங்களை மன்னிக்கிறதற்கு இவர்
யார்?’’என்று தங்களுக்குள்ளாக முறு முறுத்தார்கள்.
அதையும் கவனித்த
இயேசு கிறிஸ்து அவர்களின் அறியாமையை எண்ணி ஒன்றும் பதில் சொல்லாமல், அந்த பெண்ணை
பார்த்து, உன்னுடைய நம்பிக்கையும் விசுவாசமும்தான் உன்னை பாவத்திலிருந்து
விடுவித்தது. சமாதானத்துடன் போ. இனி பாவம் செய்யாதே என்று சொன்னார்.
இயேசு
கிறிஸ்துவிடம் இருந்து வந்த அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளை சுற்றிலுமாய்
ஆயிரம் ஆயிரம் தூதர்கள் நின்று அவள் மேல் மலர்களை தூவி, அவளை வாழ்த்துவதைப்போல்
உணர்ந்தாள். அப்படியே காற்றில் மிதப்பது போல் இருந்தது அவளுடைய உள்ளம். பாவ
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைவதிலும், மன்னிப்பிலும், பரிசுத்தமான
வாழ்க்கையில் மட்டும் தான், உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்று அறிந்தவளாய், தன்னுடைய பாவபாரம் எல்லாம் நீங்கி,
சுதந்திர பறவையாய் துள்ளி குதித்து தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
லூக்கா 7:36-50 லிருந்து கதை வடிவில்.......
லூக்கா 7:36-50 லிருந்து கதை வடிவில்.......
0 comments:
Post a Comment