கம்பளிப்புழுவின் ஆதங்கம்
ஒரு கம்பளிப்புழு ஒவ்வொரு செடியாக ஊர்ந்து சென்று அதிலுள்ள மெல்லிய இலைகளைத் தன் தாடையில் வைத்து அரைத்துத் தின்று தன் பசியைப்போக்கிக் கொண்டிருந்தது. அப்போது செடிகளிலுள்ள பூக்களும் இலைகளும் பழங்களும் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் சலசலப்பான சத்தம் கம்பளிப்புழுவின் கவனத்தை திருப்பியது. தன் காதுகளை நன்றாகத் தீட்டிக் கொண்டு அவைகள் பேசுவதைக்கேட்டது.
``இவ்வளவு அழகான, விதம் விதமான நிறங்களுடன் நம்மைப் படைத்த தேவன், இந்தக் கம்பளிப்புழுவையும் படைத்தது எதற்காக? நம்மை ஏன்தான் இப்படி அலங்கோலமாக்குகிறது இந்தகம்பளிப்புழு? பார்த்தாலே ரொம்ப அருவருப்பாய் வேறு இருக்கிறது. ஆனால் இதன் அம்மா எவ்வளவு அழகாயிருக்கிறது. எவ்வளவு நாகரிகமாக நடந்து கொள்கிறது. இதெல்லாம் ஏன் வெளியில் வருகிறது. அப்படி வந்தாலும் நம்மை ஏன் இப்படி அசிங்கப்படுத்துகிறது. என்று பேசிக் கொண்டன.
இதைக் கேட்ட கம்பளிப்புழு மிகவும் வேதனையுடன் கண்ணீர் வடித்துக்கொண்டு தன் அம்மாவிடம் போய் ``நீ எவ்வளவு அழகாயிருக்கிறாய், வண்ண வண்ண சிறகுகளுடன்! உன்னைப் பார்த்தாலே சிறுவர் முதல் பெரியவர் வரை விரட்டிப்பிடித்து விளையாடுகின்றனர்; அதிகமாய் நேசிக்கின்றனர், பூக்களெல்லாம் உன் வருகையை எதிர்பார்க்கின்றன, ஆனால் நான்தான் உனது பிள்ளை என்று சொல்லிக் கொள்ள முடியாதபடி இவ்வளவு அசிங்கமாக நான் பிறந்து இருக்கிறேனே ஏன்? மற்றவர்கள் பேசுவதை கேட்கும் போது என்னைப்பார்த்தால் எனக்கே அருவருப்பாக தோன்றுகிறது. உண்மையில் நீதான் என்னைப்பெற்றாயா? அல்லது வேறு எங்கிருந்தாவது தத்து எடுத்துக்கொண்டாயா? என் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறாய்? நானும் உன்னைப் போல் மாற ரொம்ப ஆசையாயிருக்கிறது. முடியுமா என்னால்? சொல் அம்மா! சொல்!'' என்றது!``
எல்லாவற்றையும் அமைதியாக கேட்ட வண்ணத்துபூச்சு மகனே! நீ கவலைப்படாதே! உன்னைப் போல தான் நானும் இருந்தேன். நீ எப்படி மற்றவர்களால் உதாசீனப்படுத்தப்பட்டு வேதனைப்படுகிறாயோ, நானும் அப்படியே மற்றவர்களால் வேதனைப்படுத்தப்பட்டேன். என்னைப்பார்த்தாலே எல்லோரும் அருவருப்பாக நினைத்து ஒதுங்கி போவார்கள். வெளியில் சொல்லமுடியாதபடி பல நாட்கள் நானும் அழுதிருக்கிறேன். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இப்போது இருப்பது போல் நான் அழகாகப் பறக்கும்படி பட்டுச் சிறகுகள், பல வண்ணங்களுடன் பார்க்கிறவர் மனம் மகிழும்படியாக தேவன் என்னை மாற்றினார்! என்னைப் போலவே நீ மாறும்படி தேவன் ஏற்கனவே உறுதி செய்து உத்தரவிட்டு விட்டார். அதனால் நீ கொஞ்சம் பொறுமையாயிரு! அவர் உன்னை மறு ரூபம் ஆக்கும்வரை அவசரப்படாமல் காத்திரு'' நீ மறுரூபமான பிறகு யாரெல்லாம் உன்னை உதாசீன படுத்தினார்களோ அவர்களே நீ எப்போது வருவாய் என்று உன் வருகைக்காக காத்திருப்பார்கள், கவலைப்படாதே, தேவன் மறுரூபப்படுத்துவார் என்றது,
``உண்மையாகவ அம்மா நானும் உங்களைப்போல அழகாக மாறிவிடுவேனா? நம்பவேமுடியவில்லையே! தேங்க்காட்'' என்று உற்சாகத்தின் மிகுதியில் துள்ளி குதிக்க ஆரம்பித்தது கம்பளிப்புழு. நாட்கள் செல்ல ஆரம்பித்தது ஆதங்கப்பட்ட கம்பிளிப்புழு, வண்ணத்துப்பூச்சியாக மாறியது, செடியில் உள்ள இலைகளும், பூக்களும், பழங்களும் அதனுடைய வருகைக்காக காத்திருந்தது. ஒவ்வொருநாளும் மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தது கம்பளிப்புழுவாக இருந்த வண்ணத்துப்பூச்சு.
அன்பு சகோதரனே சகோதரியே உங்கள் வாழ்வும் தற்போது கம்பளிப்புளுவைப்போல இருக்கிறதா? கவலைப்படாதீர்கள் உங்கள் வாழ்வை இயேசு கிறிஸ்து வண்ணத்துப்பூச்சியைப்போல மறுரூபமாக்குவார்.
0 comments:
Post a Comment