Bread of Life Church India

நிறைவான பலனைப்பெறுவாய்

   ``உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன்கிடைப்பதாக என்றான்'' <ரூத் 2:12>.

    இந்த ஆசீர்வாதமான வார்த்தையை ரூத்தைப்பார்த்து போவாஸ் சொல்லுகிறார். ரூத்தின் செய்கைகளையும், அவர் உன்னதமான கர்த்தர் மேல் வைத்திருக்கும் விசுவாசத்தையும் அறிந்து அப்படிச்சொல்லுகிறார். எல்லோருமே ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். இது இயற்கை, ஆனால் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளுவதற்கான செய்கைகள் எல்லோரிடத்திலும் இருப்பது இல்லை.


    ஆனால் இந்த ரூத் இதில் விதிவிலக்காகவும், முன்மாதிரியாகவும்  இருக்கிறார். அந்நாட்களில் இஸ்ரவேலர் அல்லாத பிற தெய்வ வழிபாடு கொண்டவர்களை வேதம் புறஜாதிகள் என்று அழைக்கிறது, அப்படிப்பட்ட புறஜாதியாகிய மோவாப் பெண் ரூத். உண்மையான தேவன் யார் என்பதை சரியாக அறிந்து கொண்டாள். அறிந்து கொண்டது மட்டுமல்ல, இளம் வயதில் கணவனை இழந்து விதவையாக இருக்கிறார், அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவளுடைய மாமியார் நகோமி அவளுடைய தேசத்திலேயே வேறோரு திருமணம் செய்து கொள்ளும் படியாக சொல்லி விட்டு தனது சொந்த தேசமான இஸ்ரேலுக்கு புறப்படுகிறாள், ஆனால் ரூத் மோவாப் தேசத்தையும், தன்னுடைய சொந்தங்களையும், உறவுகளையும் விட்டு விட்டு, தனது மாமியாரின் தெய்வமே உண்மையான தெய்வம் என்று தனது மாமியாரை பின்தொடர்ந்து வருகிறாள்.

    அப்பொழுது அவள்: இதோ, உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய்விட்டாளே; நீயும் உன் சகோதரியின் பிறகே திரும்பிப்போ என்றாள்.

    அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.

    நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக் கடவர் என்றாள்'' <ரூத் 1:15_17>

    இந்த உலகத்தில் எத்தனையோ தெய்வ வழிபாடுகள் இருக்கலாம், ஆனால் ஒரே தேவன்  உண்டு. அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே. அவரை அறிந்து பின்பற்றும் போது அதுவே நம்முடைய வாழ்வில் நிறைவான பலன்களையும், நன்மைகளையும் கொண்டு வரும். மற்றபடி எல்லாம் மாயையும் மனதுக்கு சஞ்சலத்தையுமே கொண்டு வரும்.

    இன்றைக்கும் அநேகர் என்ன சொல்லுகிறார்கள் என்றால் இயேசு கிறிஸ்துவை எனக்கு மிகவும் பிடிக்கும், அவரே உண்மையான தேவன் என்பதையும் நான் அறிவேன். ஆனால் எனது பெற்றோருக்காகத்தான் நான் மற்ற தெய்வ வழிபாடுகளில் இருக்கிறேன் என்றும், எனது உறவினர் களுக்காகவே நான் அதில் இருக்கிறேன் என்றும், எனது ஜாதி மக்களுக்காகவே நான் அதில் இருக்கிறேன் என்றும் சொல்லுகிறார்கள்.

    பிரியமானவர்களே, ஜாதி ஜனங்களோ, சொந்த பந்தங்களோ, உங்கள் உறவு முறைகளோ, அல்லது நீங்கள் வழிபடும் தெய்வங்களோ உங்களை  இரட்சிக்க முடியாது, உங்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தை கொடுக்க முடியாது. ஆனால் உண்மையான தெய்வம் நம்மை தேடி இந்த பூமிக்கு வந்து நம்முடைய பாவங்களுக்காக அவர் தண்டணையை ஏற்றுக்கொண்டு உனக்காகவும் எனக்காகவும் மரித்து மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தாரே, அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும் பொழுது, நம்மை இரட்சிக்கிறார். நமது வாழ்க்கையை நன்மையினால் நிரப்புகிறார்.

    இதைத்தான் மோவாப் பெண்ணான ரூத் சரியாக அறிந்து கொண்டாள். தேவனுடைய நற்பலன்களை பெற்றுக்கொண்டாள். அவள் தனது சொந்தபந்தங்களிடத்தில் ஆலோசிக்கவில்லை. தனது பெற்றோரிடத்தில் அனுமதி கேட்க வில்லை. அவள் தனது சொந்த வாழ்க்கையில் உண்மையான தெய்வத்தை சரியாக அறிந்தாள். மிகவும் மன உறுதியுடன் காணப்பட்டாள்.

    ``அவள் தன்னோடேகூட வர மனஉறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை'' <ரூத் 1:18> நகோமி.

    அவள் எடுத்த சரியான முடிவே அவளை சரித்திரத்தில் இடம்பிடிக்க செய்தது,
    எனக்கன்பான சகோதரனே, சகோதரியே நீங்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறீர்கள். இன்னும் கொஞ்ச நாள்கள் போகட்டும், இன்னும் காலங்கள் இருக்கிறது என்று காலத்தை தள்ளிப்போட பார்க்கிறீர்களா? அல்லது என்னுடைய மகன், மகளுடைய திருமணம் முடிந்த பிறகு இந்த இயேசு கிறிஸ்து விடத்தில் வரலாம் என்று நாட்களை கடத்திக்கொண்டிருக்கிறீர்களா? நான் இப்போது அறிந்திருக்கிற இயேசு கிறிஸ்துவை நான் எற்றுக்கொண்டது தெரிந்தால் என் ஜாதி ஜனம் என்னை ஒதுக்கி வைத்து விடுவார்கள். நல்லது கெட்டது ஒன்றிலும், பங்கெடுக்க மாட்டார்கள், நானும் பங்கெடுக்க முடியாது, அதனால் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளி நிற்கிறீர்களா? நான் கிறிஸ்தவத்துக்குள் வந்து விட்டால் எனது பிள்ளைகளை எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்று தயங்கி நிற்கிறீர்களா? 

    உங்கள் கவலைகளையும், பயங்களையும் தூக்கி எறிந்து விட்டு உடனடியாக இயேசு கிறிஸ்துவிடம் வருவீர்களானால், இந்த ரூத்தைப் போல உங்கள் வாழ்வும் பிரகாசிக்கும். நீங்களும் தேவனிடத்தில் இருந்து நற்பலனை பெறுவீர்கள். கிறிஸ்தவம் அந்நியமும் அல்ல, இயேசு கிறிஸ்து அந்நிய தெய்வமும் அல்ல, அவரே முழு உலகையும் படைத்த ஒரே தேவன். உங்கள் பிரச்சனைகள், வேதனைகள் துக்கங்கள் யாவற்றையும் மாற்றி, உங்கள் பாவம், சாபம் யாவற்றிலுமிருந்து உங்களை விடுவிக்கிறவர் அவர் மட்டுமே.

    நீங்க என்ன தான் மற்ற தெய்வங்களையும், மதங்களையும் பின்பற்றினாலும், உங்கள் பாவமோ சாபமோ, உங்கள் பிரச்சனைகளோ, தீரவே தீராது. மேலும் மேலும் வளர்ந்து கொண்டுதான் இருக்கும். உங்கள் வாழ்க்கையில் இருக்கிற எல்லா பிரச்சனைகளிலிருந்தும் நீங்கள் வெளியே வருவதற்கும், உங்கள் பாவ சாபமெல்லாம் நீங்குவதற்கும் ஒரே பரிகாரம் இயேசு கிறிஸ்து மட்டுமே. தயங்கி நிற்காமல் உடனடியாக இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள்.  

    நாம் பிரச்சனையில் இருக்கும் போது நம்முடைய பிரச்சனையை தீர்க்க வராத நம்முடைய உறவினரும், ஜாதி ஜனமும். நாம் நன்மை பெற்றுக்கொள்ளும் படியாக இயேசு கிறிஸ்துவிடம் வந்ததும் எங்கிருந்துதான் வருவாங்களோ தெரியாது. தடுக்க வந்து விடுவார்கள். நம்முடைய குலம் என்ன கோத்திரம், என்ன, நீ ஏன் அங்கு போனாய் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு நம்மை ஒரு வழியாக்கி விடுவார்கள். ஆனால் நாம்தான் தெளிவாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட செயல்களெல்லாம் நம்முடைய உறவினர்களிடமிருந்து வருவதல்ல, மாறாக அவர்கள் மூலமாக பிசாசு நம்மை இயேசு கிறிஸ்துவிடமிருந்து பிரிக்க எடுக்கும் சூழ்ச்சிகள் என்பதை நாம் முதலாவது அறிந்து கொள்ள வேண்டும்.

    நமக்கு யாரை அதிகமாக பிடிக்குமோ அவர்களைக் கொண்டுதான், நம்மை இயேசு கிறிஸ்துவிடமிருந்து பிசாசு பிரிக்கப்பார்ப்பான். நம்முடைய வீணான வைராக்கியங்களும்,  மற்றப்பாரம் பரியங்களும் ஒன்றுக்கும் உதவாது. இல்லாததை இருப்பது போல நினைத்து எத்தனை காலந்தான் நம்மைநாமே ஏமாற்றிக்கொண்டிருக்க முடியும். உங்களுடைய பக்தி உண்மைதான், உங்கள் ஆத்மீக தேடல் நல்லதுதான். ஆனால் உங்கள் பக்தியும், உங்கள் ஆத்மீக தேடலும் எப்படி இருக்கிறது தெரியுமா?  காளை மாடு கொம்பில் பால் கரக்க முயற்சிப்பதற்கு சமானம்.

    தேவனையே அறிந்திராத சந்ததியில் இருந்து வந்த ரூத் தனக்கு கிடைத்த சரியான சந்தர்பத்தை பிடித்துக்கொண்டு, உண்மையான தேவன் யார் என்பதை அறிந்து பிடித்துக்கொண்டாள். அது மாத்திரமல்ல தேவனையே பற்றிப் பிடித்துக்கொண்டு, தனது மாமியாரோடு இஸ்ரேல் தேசத்துக்கு வருகிறாள். அவளுடைய விசுவாசத்தையும், உண்மையையும் அறிந்தவராக போவாஸ் கர்த்தருடைய நாமத்தினாலே  நிறைவான பலனை பெற்றுக் கொள்வாய் என்று, அவளை வாழ்த்தும் அந்த வசனத்தையே இப்பொழுது நாம் தியானித்துக் கொண்டிருக்கிறோம். 

    அந்த ஆசீர்வாதம் ஒரு மனிதனால் கொடுக்கப்பட்டது அல்ல, தேவனால் கொடுக்கப்பட்டது. ஆகவே அந்த ஆசீர்வாதம், ரூத்துக்கும் அவளுடைய சந்ததிக்கும் மட்டுமல்ல, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இப்பூமியில் மனித சாயலாக வந்த வம்ச வரலாற்றிலும் இடம்பிடித்து, இன்றும் பேசப்பட்டு வருகிறாள். இதற்கெல்லாம் ஒரே காரணம் உண்மையான தெய்வத்தை அறிந்து விசுவாசித்ததினால் மட்டுமே.         நீங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே நம்மைப்படைத்த தேவன் என்பதை அறிந்தும் மற்றவர்கள் என்ன சொல்லுவார்களோ என்று, பயந்து கொண்டிருக்கிறீர்களா? உங்கள் பயத்தை தூக்கி எறிந்து விட்டு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் வாருங்கள். உங்கள் பாவங்கள், சாபங்கள் நீக்கப்பட்டு, வேதனைகள், துன்பங்கள், கஷ்டங்கள் நீங்கி, சமாதானம், சந்தோஷம், நிம்மதி என்ற நிறைவான பலன்களைப் பெறுவீர்கள்.

    இன்று இந்த வார்த்தைகளை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் இன்னும் நாட்களைத் தள்ளிப்போடாமல் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளுங்கள். வேதாகமத்தில் ரூத் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ நபர்களை உங்களுக்கு காண்பிக்க முடியும், அது மட்டுமல்ல இந்த நாட்களிலும் எத்தனையோ பேர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு நிறைவான பலன்களை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல. உலக மக்கள் அனைவருக்கும் அவர்தான் தெய்வம்.

    பிசாசு செய்யும் தந்திரங்களில் ஒன்று இயேசு கிறிஸ்தவர்களுக்கு மட்டும்தான் தெய்வம் என்றும், இயேசு கிறிஸ்து வெளிநாட்டவருக்குத் தான் தெய்வம் என்றும் சில மனிதர்களைக்கொண்டு ஏமாற்றி வருகிறான். இந்த வஞ்சக வலையில் நீங்கள் விழுந்து விடாமல் இன்று உங்களுக்கு அறிவிக்கப்படும் உண்மையான நற்செய்தியை நம்பி, விசுவாசித்து நன்மைகளை உங்கள் வாழ்க்கையில் பெற்றுக்கொள்ளும் படியாக இந்த நல்ல செய்தி வழியாக கேட்டுக்கொண்டு, உங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நிறைவான நன்மைகளை பெற்றுக்கொள்வீர்கள் என்று வாழ்த்துகிறேன். உலக இரட்சகராகிய இயேசு கிறிஸ்துதாமே உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதித்து சகல நன்மையினாலும் நிறைத்து நடத்துவாராக ஆமேன்.


0 comments:

Post a Comment