ஆபத்து வரும் முன்......
மது அருந்தி அதில் இன்பம் காண துடிக்கிறது சிலருடைய இருதயம். அந்த மதுவினால் ஏற்படும் துன்பத்தின் மிகுதி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளாமல். அதை தனது வாழ்வின் ஒரு பகுதியாக வைத்தும், பெருமையாக நினைத்தும் வாழ்கிறவர்களை காண முடிகிறது. ஆபத்து வரும் வரை ஆபத்தின் விளைவுகளை அறியாமல் வாழ்கிறவர்கள் இப்படி மதுவுக்கு அடிமையானவர்களே.
மதுவுக்கு அடிமையானவர்களிடத்தில் என்னதான் அறிவுரை சொன்னாலும் கேட்கும் மன நிலையில் அவர்கள் இருப்பதில்லை. மதுவினால் பிடிக்கப்பட்டு, நடத்தப்பட்டவர்களை கணக்கிட்டு அவர்கள் வாழ்நாளை அறிந்தால் ஐம்பது வயதை கடந்தவர்கள் சிலர் மட்டுமே, இப்படிப்பட்ட மதுவுக்கு அடிமைப்பட்டு, விடுபட முடியாமல், குடும்பத்தை கவனிக்காமல், பிள்ளைகளை சரியாக வளர்க்காமல், வாழ்க்கையையே இழந்தோர் எண்ணிக்கைக்குள் அடங்காதோர்.
சமீபத்தில் எனக்கு தெரிந்த ஒரு வாலிப சகோதரன் வயது 22.மது என்ற போதைக்கு அடிமையாகி, ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் வருவதை கவனிக்காமல் ரயிலில் அடிபட்டு, ஒருகால், ஒரு கை முழுமையாக வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உயிருக்கு ஆபத்து இல்லாமல், தற்போது ஒரு கால், கை இல்லாமல் மிகுந்த வருத்தம் அடைகிறார். அதற்கு முன்பு சொல்லப்பட்ட அறிவுரையெல்லாம் அவருக்கு எரிச்சலையும் கோபத்தையுமே ஏற்படுத்தியது, ஆனால் அறிவுரைகளை தள்ளியதால் ஏற்பட்ட விளைவுகள் வாழ்க்கை முழுவதும் வேதனை. இப்படிப்பட்டோர் ஒருவர் இருவர் அல்ல, எண்ணிக்கைக்கு அடங்காதோர்.
குடி, போதை , இன்பமாகவும், கொண்டாட்டமாகவும் ஆரம்பிக்கப்படுகிறது, ஆனால் அது துன்பமாகவும், வேதனையாகவும் முடிகிறது. மதிமயக்கும் அந்த மதுவை அருகில் வரவிடாமல் துரத்தி அடித்து விட்டால் வாழ்க்கையில் எப்போதுமே இன்பம்தான். இந்த மதுவை ஊக்குவித்தும், மது அருந்தும் போது, துணைதேடியும், மது என்றால் இலவசமாக கூட வாங்கி தருகிறேன் என்றும் இருப்பவர்களை காணலாம், உலகமோ, அரசாங்கமோ, நண்பர்களோ மதுவை அருந்த அனுமதிக்கலாம். ஆனால் அந்த மது வாழ்க்கையையும், குடும்பத்தையும் சீக்கிரத்தில் அழித்துவிடும்.
அடிமைப்பட்டவன் அடிமைத்தனத்திலிருந்து விடுபட முடியாது ஏனென்றால் பாவம் செய்கிறவன் எவனும் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான் அது அவனை விடாது. ஆகவே, இந்த அடிமைத்தனத்திலிருந்து இயேசு கிறிஸ்து விடுதலையாக்கினால் முழுமையான விடுதலையை பெற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து இயேசு கிறிஸ்துவின் சத்திய வார்த்தைகளை அறிந்து கொண்டால் அந்த வார்த்தைகள் விடுதலையோடு வாழவைக்கும். ( யோவான் 8:32,34,36.)
0 comments:
Post a Comment