Bread of Life Church India

பின் வாங்குதல் சர்வ சாதாரணமாக இருக்கிறதே ஏன்?

     பின் வாங்குதல் என்பது ஒரே நாளில் நடந்து விடக்கூடிய ஒன்றல்ல! காரணம் விசுவாச வாழ்க்கைக்குள் வந்துவிட்ட விசுவாசி, விசுவாச வாழ்வைத் துவங்க ஆரம்பிக்கும் ஆரம்ப நாட்களில் கிறிஸ்துவைத் தவிர வேறு ஒன்றையுமே நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள்.
  
அப்பொழுது மற்ற உலக விஷயங்கள் எல்லாம் அற்பமாகத் தோன்றும், விசுவாச வாழ்விலே நல்ல நிலையை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பார்கள்.
இப்படியே தங்கள் இலக்கை நோக்கிப் போகிறவர்களும் உண்டு, இப்படிப்பட்டவர்கள் வேதாகம முறைமைகளுக்கு உட்பட்டு, கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும் தாம் போகும் பாதை சரியானதே, இதில் தவறு ஒன்றும் இல்லை என்று மனத்தெளிவோடு, விழிப்போடு விசுவாசத்தில் உறுதிபட்டவர்களாய், எந்தச் சூழ்நிலையிலும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
தேவனும் உதவி செய்து அவர்கள் விசுவாசத்தை மென்மேலும் வர்த்திக்கச் செய்து உயர்வைக் கொடுத்துக் கொண்டே இருப்பார். ஆனால் சிலர் கிறிஸ்துவுக்குள் நன்றாக விசுவாச வாழ்வை துவக்கியிருந்தாலும், கிறிஸ்துவை அறியாத விசுவாச வாழ்வுக்குள் வராமல் இருக்கும் மற்றவர்களின் வாழ்க்கையை கவனித்துப் பார்த்து, ``நான் மட்டும் ஏன் விசுவாச வாழ்விலே போராட வேண்டுமென்று, விசுவாசத்தில் தளர்ந்து போய், தாங்களும் மற்ற மனிதர்களைப் போல் வாழ்க்கையைத் தொடர ஆரம்பித்து விடுகிறார்கள்.
 இப்படிப்பட்டவர்களைப் பார்த்துதான் ``இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த
வேஷந்தரியாமல், (ரோமர் 12:2) என்று வேதம் கூறுகிறது. பிரபஞ்சம் என்று வேதம் எதைக் குறித்து கூறுகிறது ``உலக அமைப்பு''. உலக அமைப்பு என்பது மனிதர்களால் அவ்வப்போது தங்கள் வாழ்வாதாரங்களுக்கு ஏற்ப தங்களுக்கு சாதகமாக வைத்துக் கொள்ளும் தேவனுக்கு விரோதமான கொள்கைகள், இதற்கு உட்பட்டு விசுவாசிகள் வாழக்கூடாது என்றே வேதம் போதிக்கிறது.
ஆனால், விசுவாசிகள் விசுவாச வாழ்வுக்குள் இல்லாதவர்களை உற்றுக் கவனிக்கும் பொழுது, கலப்பட வாழ்க்கை வாழ ஆரம்பித்து விடுகிறார்கள். சபைக்குப் போகும் பொழுது வேதத்தின் படியாகவும், வீட்டிற்கு வந்தவுடன் உலக அமைப்புக்குள்ளாகவும் இருந்து, மாய்மாலவாழ்க்கை வாழ ஆரம்பித்து, ஒரு நாளிலே முழுவதுமாக விலகிச் சென்று விடும்படியான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
``தேமா இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்து, என்னை விட்டுப் பிரிந்து.... போய் விட்டான் (2 தீமோ 4:10). இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தேவனுக்கு விரோதமான கொள்கையை உலக மக்கள் அதிகமான பேர் பின்பற்றுவதால், குறைவான சதவீதம் கொண்ட மக்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் வேதாகமம் போதிக்கும் கொள்கையானது கடினமாகத் தோன்றி, ``தேவையில்லாமல் நாம் நம்மை நாமே ஒடுக்கிக் கொள்கிறோமோ'' என்று சந்தேகப்பட்டு, மனம் கடினப்பட்டு உலக அமைப்புக்குள்ளாக தங்களையும் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்வதால் பின்மாற்ற நிலைக்கு செல்கிறார்கள்.
வேதம் கூறுகிறது, ``விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன் மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். நாமோ கெட்டுப் போகப் பின் வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.''(எபி 10:38,39).
மோசேயைக் குறித்து வேதம் கூறும் பொழுது ``அநித்தியமான பாவ சந்தோஷங்களை, அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்து கொண்டு இனி வரும் பலன் மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்'' (எபி 11:25,26)
ஆகவே, உலகமும் உலக அமைப்பும் கிறிஸ்துவை பின்பற்றாத மனிதர்களும் நமக்கு முன்மாதிரி அல்ல, வேதமும் இயேசு கிறிஸ்துவுமே முன்மாதிரி என்று, பின் பற்றுவோரின் வாழ்வில் தேவன் பிரியாமலிருப்பார். பின் மாற்றமென்பது குறைந்து உலகம் விசுவாச வாழ்வுக்கு நேராகத் திரும்பும்.



0 comments:

Post a Comment