Bread of Life Church India

மரணத்துக்கு மரணம் !

 

மரிக்கும்படியாக முதல் மனிதனாகிய ஆதாம் படைக்கப்பட வில்லை. எப்பொழுது ஆதாமும், ஏவாளும் தேவனுடைய வார்த்தையை மீறி செயல்பட ஆரம்பித்தார்களோ, அந்நேரம் முதல் மரணம் மனிதனுக்குள்ளாக பிரவேசிக்க ஆரம்பித்தது.
    மரணம் என்பது, தண்டனைதான், ``தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி; நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.
    ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார் <ஆதி 2:16,17>.
    ``சாகவே சாவாய்'' என்னும் பதம், இரண்டு அர்த்தங்களை குறிக்கின்றவையாக இருக்கிறது.

    1 > தேவனுடைய வார்த்தை யை மீறி நடக்காத வரை, ஆதாமும், ஏவாளும், தேவனை நேரடியாக காணமுடிந்தது. பேச முடிந்தது, அவரோடு கூட இருக்க முடிந்தது. ஆனால் தேவனுடைய வார்த்தையை அவர்கள் மீறி பாவம் செய்தவுடன், முதலாவது தேவனுக்கும், அவர்களுக்கும் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. தேவனோடு, மனிதனுக்கு இருந்த ஐக்கியம் உடைக்கப்பட்டது.
    தேவனுக்கும் மனிதனுக்கும், மிகப்பெரிய இடைவெளி <பிளவு> உண்டாகிவிட்டது. அது மட்டுமல்ல, தேவனுடைய தோட்டமாகிய ஏதேனை விட்டும், விரட்டி அடிக்கப்பட்டார்கள். இதுவே ஆவிக்குரிய முதலாம் மரணம்.
    2> ஆதாமும், ஏவாளும் படைக்கப்பட்டு, ஏதேனில் பல ஆண்டுகள் தேவனோடு உலாவி, நடந்து, பேசி, மிகுந்த சந்தோஷத் துடன் இருந்தார்கள். அப்பொழுது அவர்களின் சரீரம், பாதிக்கப் படவில்லை, அவர்கள் நலமுடன் கொழுமையாக இருந்தார்கள்.
    ஆனால்பாவம் செய்தவுடன், அவர்கள் மரணத்தை நோக்கி, அதாவது, தங்களின் சரீர அழிவை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டனர். நாட்கள் ஆக ஆக சரீரம் சுருங்க ஆரம்பித்தது, பெலன் குன்ற ஆரம்பித்தது, ஒரு நாளிலே மரணத்தை சந்திக்க, அதாவது இந்த உலகத்தை விட்டே போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இது தலைமுறை தலைமுறையாக எல்லா மனிதரிலும், தொடர ஆரம்பித்தது. இதுவே இரண்டாம் மரணமாகிய சரீர மரணம்.
    பாவம் செய்து, தண்டணை பெற்ற மனிதன், முன்பு போல தேவனை நெருங்க முடியவில்லை, ஏனென்றால் தேவனின் பரிசுத்தமும், மனிதனின் பாவமும், ஒன்றுக்கொன்று நேர் எதிரானது. பரிசுத்தம் இல்லாமல், மனிதன் தேவனை தரிசிப்பது என்பது கூடாத காரியம். ஆகவே தேவனுக்கும் மனிதனுக்கும் இடைவெளி அதிகமானது. ஆனால் தேவன் மனிதனை அப்படியே விட்டுவிட விரும்பவில்லை.
தேவனுக்கும், மனிதனுக்குமான இடைவெளியை நீக்கி, தேவனோடு மனிதன் ஐக்கியம் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து, இவ்வுலகத்திற்கு பாவமறியாத கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ''பாவ நிவாரண பலியாக அனுப்பி, எல்லா மனிதரையும் கிறிஸ்துவுக்குள்ளாக தன்னோடு இணைத்துக்கொண்டார்.
    இப்பொழுதும் உலகத்தில் பிறக்கிற எல்லா மனிதரும், சரீரத்தில் மரித்துதான் ஆக வேண்டும். ஒருவேளை இப்பூலோக வாழ்வில் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் பாவ நிலையோடு மனிதன் மரிப்பானானால்,  மரணத்துக்கு பின்னும், அவன் அக்கினியும், கந்தகமும் எரிகிற எரி நரகமாகிய மூன்றாம் மரணத்துக்குள்ளாக போக வேண்டிய நிலை ஏற்படும்.
    அன்பானவர்களே, அப்படி மூன்றாம் மரணமாகிய எரி நரகத்துக்கு போகாமல், தப்பித்துக்கொள்ள வேண்டுமானால்,  என்னுடைய பாவத்துக்காக இயேசு கிறிஸ்து மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் <1கொரி 15:3,4> என்பதை விசுவாசித்து,கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, தனது இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் பொழுது, முதலாவது, பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆவிக்குரிய மரணமாகிய ``தேவனுக்கும் மனிதனுக்குமான இடைவெளி சரிசெய்யப்படுகிறது'' <தீமோ 2:5,6>.
    மேலும், இயேசு கிறிஸ்துவின் மரணம் அவரை விசுவாசிக்கும் மனிதர்களின் வாழ்வில், எப்படிப்பட்ட நன்மைகளை கொண்டு வந்தது?
    அவருடைய உயித்தெழு தலின் மூலமாக, அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன? என்பதைக் குறித்து சுருக்கமாக சில வசனங்களை கொண்டு, ஆவியானவர் வெளிப்படுத்தி காண்பிக்கிறவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளு கிறேன் ஜெபத்தோடு வாசியுங்கள்.
    நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் போதே, கர்த்தருடைய வல்லமை உங்களை நிரப்பும். பெலவீனங்களும், வியாதியும், சோர்வும், அசதியும் உங்களை விட்டு விலகுவதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.
    உங்களுக்கு எதிராக சத்துரு வைத்திருந்த எல்லா கட்டுக்களும், தடைகளும் உடைக்கப்படுவதை காண்பீர்கள். தேவனுக்கே மகிமை.
பாவத்துக்கு தண்டணை
    ``ஆன படியினால், கிறிஸ்து  இயேசுவுக்குக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின் படி நடவாமல் ஆவியின் படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பில்லை,
    கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவை களின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
    அதெப்படியெனில், மாம்சத்திலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாத தை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாக தீர்த்தார் < ரோமர் 8:1_3>.
    இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதலுக்கு முன்வரை பாவம்தான் மனிதனை தண்டித்துக்கொண்டிருந்தது. அதாவது ஆக்கினைக்குள்ளாக தீர்த்துக் கொண்டிருந்தது, ஆனால் இயேசுவின் மரணம்,உயிர்த் தெழுதல், பாவத்திற்கு தண்டனை கொடுத்தது,
    ''நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? <ரோமர் 7:24> என்று, பாவத்தின் கோரப்பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் மனிதனின் கூக்குரலுக்கு, தேவனின் பதிலாகத்தான் ரோமர் 8:1_3 வரை உள்ள வசனம் கொடுக்கப் பட்டுள்ளது.
    பாவமானது எந்த மனிதனையும் சுயாதீனமாக இருக்க விடவில்லை. தன்னுடைய விருப்பத்தின் படியாக மனிதனை அடிமைப்படுத்தி வந்தது.
    ஆனால் இப்பொழுதோ, ``இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பியவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
    ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல <ரோமர் 8:11,12>.     
         பாவத்துக்கு அடிமைகளாக இருந்த காலத்தில், நாம் மாம்சத்துக்கு <பாவ சுபாவத்திற்கு> கடனாளிகளாக இருந்தோம், பாவம் தன் விருப்பத்தின் படியெல்லாம் நம்மை நடத்தியது.
    எப்பொழுது இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசிக்க ஆரம்பித்தோமோ, அப்பொழுதே, நாம் பாவத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டோம். ஆகவே இனி பாவத்துக்கு அடிமைகள் அல்ல, பாவத்துக்கு கடனாளிகளல்ல, இனி பாவ சுபாவம் நம்மை ஆளுகை செய்ய முடியாது. இப்பொழுது கிருபைக்கு <இயேசுவுக்கு> கீழ்ப்பட்டவர்கள். இனிமேல் இயேசு சொல்வதை மட்டுமே நாம் செய்வோம், தைரியமாக சொல்லுவோம் இனி நான் பாவம் செய்ய மாட்டேன்.எனக்குள்ளாக இருந்த பாவத்தின் வேரை  என் ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்து அழித்து விட்டார்.
    என்னை அழிவுக்கு நேராக நடத்திக்கொண்டிருந்த பாவத்தின் வேரை இயேசு அழித்து விட்டார், இனி நான் பாவத்துக்கு அடிமை இல்லை என்று விடுதலையோடு சொல்லுங்க.
மரணத்துக்கு அழிவு
    ``அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத் தினாலே வெளியரங்கமாக்கினார் <2தீமோ 1:10>. இயேசு கிறிஸ்துவின் மரணம், மரணத்தை அழித்தது. ``மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும் ஜீவ காலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்குள் ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும் படிக்கும் அப்படியானார் <எபி 2:14,15>.
    மரணம் ஒரு மனிதனையும் விட்டு வைக்க வில்லை. எல்லோரையும் அடிமை படுத்தி வைத்திருந்தது, இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்கு முன் வரை, மரணமே ஜெயித்துக்கொண்டு வந்தது. அதற்கு ஒரு மனிதரும் தப்பித்துக் கொள்ளவே முடியவில்லை.
    காரணம், நியாயப் பிரமாணம், பாவத்திற்கு பெலன் கொடுத்தது. பாவம், மரணத்துக்கு கூர் ஏற்படுத்திக்கொடுத்தது. சட்டத்தை மீறுகிற எவனும் தண்டிக்கப்பட வேண்டும்.
    நியாயப்பிரமாணம் <சட்டம்>  தன் கடமையை செய்யும், `` நியாயப்பிரமாணம் கொடுக்கப் படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப் பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது <ரோமர் 5:13>.
    நியாயப்பிரமாணம் இல்லாமல் இருந்தால் நம்முடைய தேவனை ``நீதியின் தேவன்'' என்று எப்படி அழைக்க முடியும். நியாயப்பிரமாணமே, மனிதனின் பாவ நிலையை உணர்த்தி காண்பித்து, தன் பாவம் மன்னிக்கப்பட கிருபை வேண்டி, தேவனிடம் செல்ல உந்தி தள்ளுகிறது.
    ஆனால் மனிதன், தன்னை தவறு செய்யாதவன் போலவும், பாவம் இல்லாதவனாகவும் நினைத்து வாழ்கிறான். ஆனால் தேவனின் நியாயப்பிரமாணத்தின் முன்பாக தன்னை நிறுத்தி பார்க்கும் பொழுது, தான் எவ்வளவு பாவி என்பது தெரியவரும்.
    அதைத்தான் பவுல் அப்போஸ்தலர் அருமையாக சொல்லுவார் ``தங்களைக் கொண்டு தங்களை அளந்து கொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக் கொள்ளுகிற அவர்கள் புத்திமான் களல்ல...... தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப் பிரமாணத்தின் படியே மேன்மை பாராட்டுகிறோம் <2கொரி 10:12,13>.
    ``பாவத்தின் சம்பளம் மரணம்'' <ரோமர் 6:23>. ஆதலால் தான் மனிதனால் மரணத்திலிருந்து விடுபடவே முடியவில்லை,
    ஆனால் தேவன் மனிதன் மேல் வைத்த அன்பு வெளிப்பட வேண்டும். எப்படி தேவன், நீதியின் தேவன் என்று அழைக்கப் படுகிறாறோ, அதே போல் அவர் ``அன்பின் தேவன்'' ஆகையால்தான் மனிதன், பாவம், மரணம், பாதாளத்தின் வல்லமையிலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என்று தமது ஒரே பேரான குமாரனை இப்பூமிக்கு அனுப்பினார்.
    ஏனென்றால், பாவத்தை ஜெயிக்க வேண்டுமானால், பாவமே இல்லாத ஒருவரால்தான் ஜெயிக்க முடியும். இயேசுவானவர் சொல்லுகிறார். ``இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை <யோவான் 14:30>.
    பாவத்தை ஜெயித்தவரால் தான், மரணத்தை ஜெயிக்க முடியும். மரணத்தை ஜெயித்தவரால் தான் பாதாளத்தை ஜெயிக்க முடியும்.
    இயேசுவானவர் பாவத்தை ஜெயித்தார். மரணத்தை ஜெயித்தார். பாதாளத்தை ஜெயித்தார். ``மரித்தேன் ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுறிய திறவு கோல்களை உடையவரா யிருக்கிறேன் <வெளி 1:18>.
    மரித்த  இயேசுவானவர் உயிர்த்தெழுந்தார். உலகத்தில் அன்று முதல் இன்று வரை, ஒருவராலும் செய்யமுடியாத செயல். இதுதான் ``சுவிசேஷம்''. இயேசு கிறிஸ்து மரணத்தை அழித்து, ஜீவனையும், அழியாமையையும் தமது மரணத்தினாலே வெளிப் படுத்தி காண்பித்தார்.<2தீமோ 1:10>.
    எனவே, இயேசுவின்  மரணம், உயிர்த்தெழுதலின் மூலமாக அவரை விசுவாசிக் கிறவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? நல்ல செய்தி என்ன?
    ``கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம்'' <பிலி 1:21>. ஒரு மனிதனுக்குள் பாவம் ஜீவனாக இருக்கும் போது, சாவு அவனுக்கு நஷ்டம்.
    கிறிஸ்துவுக்குள், கிறிஸ்து வின் ஜீவனோடு இருப்பவருக்கு சாவு ஆதாயம். ``எப்படி என்று கேட்க தோன்றுகிறது அல்லவா? விசுவாசத்தில் கிறிஸ்துவை தரிசித்துக் கொண்டிருப்பவர், தன் சரீர மரணத்திற்கு பின், முக முகமாக தரிசிக்கப்போகிறார். நித்திய, நித்திய காலமாக அவரோடு வாழப்போகிறார்.
    இயேசுவானவர் மரணத்திற்கே மரணத்தை கொடுத்து விட்டார். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களை மரணம் ஒரு நாளும் அவரை விட்டு பிரிக்க முடியாது. சரீரத்தை விட்டு, ஆத்துமா பிரிந்து இயேசுவோடு வாழப்போகிறது.
    எனவே, இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால், இம்மையிலும் இயேசுவோடு, மறுமையிலும் இயேசுவோடு, மரணமே, உன்னால் கிறிஸ்துவை விட்டு பிரிக்க முடியாது <ரோமர் 8:36_39> என்று சொல்லுங்க.
    கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையில் செய்யப்போகிற அற்புதங்களை நீங்கள் இன்றைக்கு காண்பீர்கள். மரணபயத்தை காண்பித்து உங்களை வாதித்துக் கொண்டிருந்த பிசாசு உங்களை விட்டு ஓடுகிறான். அவன் கிரியைகள் அழிக்கப்படுகிறது. கர்த்தர் உங்களை பெலப்படுத்துகிறார். உங்களுக்குள்ளாக விசுவாசம் பெருகுகிறது.
பாதாளத்துக்கு தோல்வி
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே!  உன் ஜெயம் எங்கே? மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம் <1கொரி 15:55,56>.
    மரணத்தின் மூலமாக பாதாளம் எல்லோரையும் தனக்குள்ளாக அடிமை படுத்திக்கொண்டது. இயேசுவின் மரணத்துக்கு முன் வரை பாதாளமே ஜெயித்துக் கொண்டிருந்தது. அதற்கு ஒரு மனிதனும் தப்பித்துக்கொள்ள முடியவில்லை.
    ஆனால் இயேசுவையோ பாதாளம் தனக்குள்ளாக அடைத்து வைக்க முடிய வில்லை. பாதாளத்திற்கு தோல்வியை கொடுக்கும்படியாக ``பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார்'' <எபே 4:9>. சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, உன்னதத்திற்கு ஏறினார்< எபே 4:8> என்று வேதம் கூறுகிறது.
    ``இந்த கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள் வதில்லை'' <மத் 16:18>. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற வர்களே ``சபை'' நீங்களும் நானுமே ``கிறிஸ்துவின் சரீரமாகிய சபை'', நாம் உண்மையாக தேவ பக்தியுடனும், உண்மையுடனும், தேவனுக்கு பிரியமாக ஜீவிக்கும் பொழுது, பாதாளத்தின் வாசல்கள் நம்மை மேற்கொள்வதில்லை, திருச்சபை யாகிய நீங்களும், நானுமே பாதாளத்தை மேற்கொள்வோம், அப்படிப்பட்ட அதிகாரத்தையும், வல்லமையையும் தேவாதி தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார்.
    பிசாசு உங்களை ஒரு நாளும் மேற்கொள்ள முடியாது. உங்களுக்கு இருக்கும் பிரச்சனையை பார்த்து, நீங்கள் சோர்ந்து போகாதிருங்கள். உயிரோடு எழுந்த இயேசு உங்களோடு இருக்கிறார். அல்லேலூயா..
    ``பாதாளமே உன் ஜெயமெங்கே'' என்று முழங்கியவரின் பிள்ளைகளாகிய நாம் ஜெயிக்க பிறந்தவர்கள், ``நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்''    < 1 யோவான் 5:4>. உங்களுக்கு எதிராக உலகமும், பிசாசும், மாம்சமும் கொண்டு வருகிற எல்லா ஆயுதங்களையும் விசுவாசத்தினாலே முறியடியுங்கள். ``உலகத்தை ஜெயித்தவர் நம்மோடு உண்டு, தேவனுக்கு கீழ்ப்படியுங்கள் பிசாசுக்கும் அவனுடைய செயலுக்கும் எதிர்த்து நில்லுங்கள். அவன் உங்களை விட்டு ஓடிப்போவான் <யாக் 4:7>.
ஜெயமுள்ள வாழ்க்கை வாழுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
   
           

0 comments:

Post a Comment